எமது அணுகுமுறைகள் வித்தியாசமானது – சி.தவராசா

நாம் அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக் கொடுக்கிறோம் என்று எம்மை குற்றஞ்சாட்டுகின்றார்கள். நாம் உரிமைகளை என்றும் விட்டுக்கொடுப்பவர்கள் அல்ல. ஆனால், அதை பெறுவதற்கான எமது அணுகுமுறைகளே வித்தியாசமானது’ என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

0000000000t1

‘இராஜதந்திர ரீதியாகவும், அரசியல் சாணக்கிய நகர்வுகளின் ஊடாகவும் இதுவரை இழந்த எத்தனையோ விடயங்களை பெற்றுள்ளோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.

கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலய கேட்போர்கூடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

‘தொடர்ந்து ஏனைய விடயங்களையும் பெறுவோம். உதாரணத்துக்கு யுத்தம் முடிவுக்கு வந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 31,091 ஏக்கர் காணிகளும் 1,120 வீடுகளும் கணக்கில் அடங்காத வீதித் தடைகளும் படையினர் வசம் இருந்தன.

இன்று வீதித் தடைகள் இல்லாத சூழலை ஏற்படுத்தியுள்ளோம். அதேபோல் படையினர் வசமிருந்த காணிகளில் 15,788 ஏக்கர் நிலப்பரப்பையும் 647 வீடுகளையும் படிப்படியாக விடுவிக்கச் செய்துள்ளோம்.

தொடர்ந்தும் ஏனைய காணிகளையும் வீடுகளையும் விடுவிப்போம். இதற்கு எமக்குத் தேவைப்படுவது அரசியல் பலம்.

அந்த அரசியல் பலத்தை நீங்கள் எங்களுக்கு தருவீர்களாயின் நிச்சயமாக எமது அரசியல் நடைமுறைகள் மூலம் உங்களது உரிமைகளுடன் கூடிய உங்கள் பிள்ளைகளுக்கு ஓர் ஒளிமயமான அபிவிருத்தியை இப் பிரதேசத்திற்கு வகுத்துக் கொடுப்போம்.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை யாழ்.மாவட்ட அபிவிருத்திக்காக 89,021 மில்லியன் ரூபாய் அரசாங்கத்தினால் செலவழிக்கப்பட்டுள்ளது.

இப் பிராந்தியத்தின் வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் இவ்வளவு பெருந்தொகையான பணம் எந்த அரசினாலும் செலவழிக்கப்படவில்லை.

சிறுவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக வேண்டுமாயின் சமாதானத்தை உருவாக்கி, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்னின்று உழைப்பவர்களை பலப்படுத்த வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts