நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல், இலங்கையராக நாம் அனைவரும் இணைந்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, இன்று தெரிவித்தார்.
யாழ். மாநகர சபையின்; கூட்டத் தொடர் இன்று வியாழக்கிழமை (28) காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் முதல்வர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மாநகர முதல்வராக இறுதியுரையை நிகழ்த்தியபோதே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாநகர சபை தேர்தலின் போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் முழுவதையும் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு.
ஆணாதிக்கம் மிகுந்த யாழ்ப்பாண மாவட்டத்தில், மாநகர முதல்வராக பெண்ணாகிய நான் தெரிவு செய்யப்பட்டேன். ஆட்சிக்கு வந்த காலம் முதல் பல நெருக்கடிகளையும் இடர்களையும் எதிர்கொண்டு வந்தேன்.
மேலும், நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப சரியான திட்டமிடல் இன்மையும் காரணமாகும். யுத்த காலத்திற்குள் வாழ்ந்த அதிகாரிகள், திட்டமிடல் தொடர்பில் பூரண அறிவைக் கொண்டிருக்கவில்லை. இதனால் அவர்களைக் கொண்டு பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது.
எங்கள் ஆட்சிக்காலத்தில், கரையோர பகுதிகளில் இருந்த இராணுவத்தினரை, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் இணக்க அரசியல் மூலம் வெளியேற்றினோம்.
இதனால். நாவாந்துறை தொடக்கம் வசந்தபுரம் வரையிலான கரையோர மக்களுக்கான பணிகளை நாங்கள் சிறப்பாக ஆற்றியிருந்தோம்.
இருந்தும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை எம்மால் செய்ய முடியவில்லை. ஏனெனில் அதற்கான அதிகாரம் மாநகர சபைக்கு இல்லாமல் இருந்தது.
மேலும், யாழ். மாநகர சபை எல்லைக்குள் நிறுவப்பட்ட சங்கிலிய மன்னன் தொடக்கம் அண்மையில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் நிறுவப்பட்ட மூன்று மன்னர்களின் சிலைகள் வரையில் பல சிக்கல்களை நாங்கள் எதிர்கொண்டோம்.
பல எதிர் விமர்சனங்களையும் நாங்கள் எதிர்கொண்டோம். இருந்தும் நாம் அதனையல்லாம் வெற்றிகொண்டோம். இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக் கூறிய கருத்துக்களை நாங்களும் வரவேற்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.