எமக்கு வீட்டுத்திட்டங்கள் தந்து வீடுகள் கட்டித்தர தேவையில்லை, சொந்த இடங்களுக்கு அனுப்பினாலே போதும்

எமக்கு வீட்டுத்திட்டங்கள் தந்து வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று இல்லை. எம்மை எமது சொந்த காணிக்கு செல்ல அனுமதித்தாலே போதும். நாம் எமது காணியில் கொட்டில்களையோ குடிசைகளையோ அமைத்துக் கொண்டு சந்தோசமாக வாழ்வோம் பலாலியை சொந்த இடமாக கொண்ட எஸ்.சரவணமுத்து என்பர் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே – 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது காணிகளை வெள்ளிக்கிழமை (13) அங்கு சென்று அடையாளப்படுத்தினர். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எனக்கு பலாலி பிரதேசத்தில் தான் வீடு இருக்கின்றது. வளலாயில் விவசாய நிலமே உண்டு. எனது வீட்டுக்கு செல்ல அனுமதி தரவில்லை இன்றைய தினம் எனது விவசாய நிலத்தை பார்வையிடவே வந்தேன்.

எனக்கு இப்பகுதியில் 50 பரப்பு விவசாய நிலமுண்டு. அதில் 4 ஆயிரம் வெங்காய கன்றுகள் நாட்டி விவசாயம் செய்வேன். இங்கிருந்து 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெயரும் நாள் அன்று காலையில் வெங்காயத்துக்கு நீர் இறைத்துவிட்டே இடம்பெயர்ந்தேன். அதன் பின்னர் இன்றைய தினம் மீண்டும் எனது விவசாய நிலத்துக்கு திரும்பியுள்ளேன்.

எனது வீடு பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு கிழக்காக உள்ளது. அதனை தற்போது இராணுவத்தினர் இடித்து அழித்துவிட்டனர். எனது வீட்டுடன் அயலில் இருந்த 6 தொடக்கம் 10 வரையிலான வீடுகளையும் இடித்து அழித்துவிட்டனர். தற்போது மாட்டுத்தொழுவம் அமைத்து மாடுகள் வளர்க்கின்றனர். அப்பகுதியில் பாரிய மண் அரண்கூட அமைத்து வைத்துள்ளார்கள்.

எமக்கு எமது சொந்த மண்ணை விட்டுப்போக மனம் இல்லை. நாட்டில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக எனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டேன்.

அவர்கள் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்றார்கள். எமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதித்தார்கள் என்றால், எமது பிள்ளைகள் இங்கு திரும்பி வந்து எம்முடன் வாழ தயாராக இருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.

இவரைப்போன்று எனது விவசாய நிலத்தை கையளித்தால் அதில் கொட்டிலை போட்டு வசித்து விவசாயம் செய்து வாழ்வேன் என திருமதி சிவசுப்பிரமணியம் நல்லபிள்ளை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், பலாலியில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து ஆவரங்காலில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். கடந்த 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இராணுவ சீருடையுடன் முகங்களுக்கு கறுத்த துணிகளை கட்டிக்கொண்டு நள்ளிரவு வேளை வீட்டுக்குள் புகுந்தவர்கள் எனது கணவரை பிடித்து இழுத்து சென்றனர்.

அதனை தடுக்க முயற்சித்த என்னை தாக்கி தள்ளிவிட்டனர். அதனால் எனது வலது கை முறித்து விட்டது. இன்று வரை அந்தக் கையில் வலி இருக்கின்றது. அதன் பின்னர் எனது கணவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி அன்று பத்திரிகையில் ஐ.நா. வுக்காக 37 பேரிடம் தாங்கள், விசாரணைகளை மேற்கொள்வதாக பெயர், விபரங்களை இலங்கை அரசாங்கம் கொடுத்ததாக செய்தி வெளியாகியிருந்தது.

அந்த செய்தியில் 37 பேரின் பெயர் விவரங்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் எனது கணவரின் பெயரும் காணப்பட்டது. அதன் பின்னரும் பல இடங்களில் விசாரித்தும் எனது கணவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

கணவர் இருக்கும் போது எனக்கு வீட்டையும் தோட்டத்தையும் தவிர வேறு இடம்தெரியாது. ஆனால் தற்போது கணவரை தேடி அலைந்து எனக்கு தெரியாத இடமே இல்லை என்று சொல்லலாம். ஆனால் கணவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எமக்கு ஒரு மகன் உள்ளான். நாட்டு சூழலால் அவனையும் வெளிநாட்டு அனுப்பிவிட்டேன். தற்போது நான் மட்டும் எனது சகோதரியுடன் வாழ்ந்து வருகின்றேன்.

எமக்கு இப்பிரதேசத்தில் 20 பரப்பு விவசாய நிலம் உண்டு. அதனை எம்மிடம் கையளித்தால், விவசாய நிலத்தில் கொட்டிலை போட்டு வசித்துக்கொண்டு விவசாயத்தையும் செய்து கொண்டு வாழ்வேன் என தெரிவித்தார்.

Related Posts