என் மகன் இருந்திருந்தால் பிரபாகரனையே ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்!!

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

Prakash-Raj-1

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், ‘நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரனைத்தான் ஹீரோவாகக் கொண்டு வளர்ந்திருப்பேன். அவர் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…

“பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. அவர் என்ன சொந்த மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா… தன் மக்களுக்காக களத்தில் நின்று 30 ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன் பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்… தற்காப்புதான்.

அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப் பிடிக்கவா முயற்சி பண்ணார்… கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர். அவர் கண்முன் நிகழ்ந்த இனவெறிக் கொடுமைகள்தான் அவரை, தன் மக்களின் விடுதலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்க வைத்திருக்கிறது.

அவர் வாழ்க்கையை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது. அவரைப் போன்ற நேர்மையான, எளிமையான, மன உறுதியும் வீரமும் கொண்ட தலைவர்களை நாம் பார்த்ததில்லை. இது வெறும் ஹீரோ வொர்ஷிப் இல்லை. இப்படிப்பட்ட மாவீரர்களை, தலைவர்களைப் போற்றாவிட்டால், நாம் மாபெரும் சரித்திர தவறு செய்தவர்களாவோம்.

கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன்தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் வீரத்தைப் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா ஒரு மாவீரன் எப்படி இருப்பார்னு பிரபாகரனைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டோம். அவரைப் பாத்துதான் நாம வளர்ந்தோம்.

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ‘இதோ பார்… இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல்’ என்று காட்டி வளர்த்திருப்பேன்…

பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.

‘வன்னி குண்டு வெடிப்புகளில் 5 புலிகள் இறக்கிறார்கள்… 50 புலிகள் பிறக்கிறார்கள்’ என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது”, என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

Related Posts