என் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: கமல்

கடந்த மாதம் தனது வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த கமலின் காலில் அடிபட்டது. அதனால் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சையின்போது அவரது காலில் சில துகள்கள் சிக்கிக் கொண்டதால் சில நாட்களுக்கு முன் அவரது காலில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில் தான் நலமாக இருப்பதாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கமல் டுவிட்டரில் கூறும்போது, “ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார்போல தோள் தாங்க இருவருடன்தான். என்றாலும் முன்னேற்றம்” என்று தன்னுடைய உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கமல்ஹாசன் உடல்நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

Related Posts