என்றுமில்லாதவாறு இம்முறை பலப்படுத்திக் காட்டுங்கள் – எம்.ஏ.சுமந்திரன்

“2016ஆம் ஆண்டு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான ஆண்டாக இருக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை என்றுமில்லாதவாறு பலப்படுத்திக்காட்டுங்கள் வென்று தருவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நடைபெற்ற த.தே. கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 2010ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தோல்வி பெற்று தெற்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் தலைவரென மமதை கொண்டார். உண்மையில் சிங்கள தேசத்தின் தலைவராக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

2010, ஆண்டு தேர்தலின் போது யுத்தத்தின் பின் தமிழ் மக்களின் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்து நின்றபோது திருகோணமலை மாவட்டம் மட்டுமே அந்த பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டது.

யுத்தம் முடிந்த பிறகு ஐ.நா. சபையில் இலங்கை அரசாங்கத்தை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக பாராட்டிப் பேசினார்கள். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றார்.

நான்தான் தமிழ் மக்களை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டு எடுத்திருக்கிறேன் என வீரம் பேசினார். ஆனால் அடுத்துவந்த பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் எங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டவர் சம்பந்தன் எனக் கூறி தமிழ்த் தேசியத்தின் தலைமைப் பொறுப்பை அவரிடம் கையளித்தார்கள்.

அன்று இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டிய அதே ஐ.நா.சபையிலே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சர்வதேச விசாரணையொன்று தேவையென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தைக் கொண்டு வர இரா. சம்பந்தன் தலைமையிலான நாம் எவ்வளவு பாடுபட்டோமென நீங்கள் அறிவீர்கள்.

என அவர் மேலும் தெரிவித்தார்

Related Posts