Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்: சந்திரகாந்தன்

என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, என்னை எந்தவிதத்திலாவது தோற்கடிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.

அப்படியிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகளவான வாக்குகளைப் பெற்று நான் வெற்றி பெற்றுள்ளேன். என்னை வெற்றி பெறச் செய்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

அத்தோடு கிழக்கு மாகாணத்திலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் கிழக்கு மாகாணத்திலே வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. தொடர்ந்து இதேபோன்று பல இடர்பாடுகளை ஏற்படுத்தக் காத்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் கிழக்கு மக்கள் மிக்க அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

11 வேட்பாளர்களில் பிள்ளையான் மட்டுமே வெற்றி – கருணாவின் சகோதரி படுதோல்வி

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டுமே இம்முறை வெற்றி பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள 35 பேரில் 15 பேர் முஸ்லிம்கள். தமிழர்கள் 12 பேரும் சிங்களவர்கள் 8 பேரும் இம்முறை மாகாண சபைக்கு இன ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டுமே இம்முறை வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 31 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்ட போதிலும் முன்னாள் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.சுபைர், எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் விமலவீர திசாநாயக்க உட்பட 13 பேரே மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா உட்பட 18 பேர் தோல்வியடைந்துள்ளார்கள். இவர்களில் 6 பேர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட, பிரதியமைச்சர் கருணாவின் சகோதரியான ருத்ரமலர் ஞானபாஸ்கரன் படுதோல்வியடைந்துள்ளார். இவரே முதலமைச்சருக்கு பொருத்தமானவர் என பிரதியமைச்சர் கருணா பிரசாரக் கூட்டங்களில் முழக்கமிட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related Posts