என்னை பகுத்தறிவு பகலவன் என்று அழைப்பது நன்றாக இருக்கிறது’’ – கமல்

ஆண்டவன் என்பதைவிட என்னை பகுத்தறிவு பகலவன் என்று அழைப்பது நன்றாக இருக்கிறது என்று பட தூங்காவனம்’ விழாவில் கமல்ஹாசன் கூறினார்.

Kamal-Haasan

கமல்ஹாசன் நடித்துள்ள புதிய படம் ‘தூங்காவனம்’. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்து இருக்கிறார். பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

ராஜேஷ் எம்.செல்வா டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

‘தூங்காவனம்’ தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. படக்காட்சிகள் 2 முறை எடுக்கப்பட்டன. கார் நம்பர் பிளேட், போலீசாரின் சீருடை போன்ற அனைத்தும் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப படமாக்கப்பட்டது.

எனவே, ‘தூங்காவனம்’ 2 படங்கள் என்று திண்ணமாக சொல்லமுடியும். 52 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டோம். ஆனால், படப்பிடிப்பு முடிந்து சில திருத்தம் செய்யவேண்டியிருந்ததால் கூடுதலாக 8 நாட்கள் ஆனது. 2 படங்களுக்கும் தனித்தனியாக பார்த்தால் 30 நாட்கள்தான் ஆகி உள்ளது. ஏற்கனவே நான் கூட 200 நாட்கள் படம் பண்ணி இருக்கிறேன்.

கொஞ்சம் திட்டமிடல், ஒத்திகை இருந்தால் விரைவாக படப்பிடிப்பை முடிக்க முடியும். அதற்கு இந்த படம் உதாரணம். படத்தில் நடித்தவர்களுக்கு நேரம் ஒதுக்கி ஒத்திகை மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எல்லோருமே திரைக்கதையை முழுமையாக படித்தார்கள். இனி வரும் படங்களிலும் அதுபோலவே அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

படக்குழுவினர் அத்தனைபேரும் சேர்ந்து உழைத்ததாலேயே விரைவாக படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. உலகதரத்தில் இதன் ‘டிரைலர்’ இருந்ததாக இங்கு பேசப்பட்டது. அந்த தரத்தை ஒளிப்பதிவாளர் கொண்டு வந்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து இந்த படத்தில் ஒரு பாடலை எழுதி உள்ளார். ஆரம்பகாலத்தில் ‘வானம் எனக்கொரு போதி மரம்’ என்ற பாடல் வரியை கேட்டேன். வைரமுத்து எழுதியது என்றனர். அதன்பிறகு எனக்கும், ‘அந்தி மழை பொழிகிறது’ என்ற பாடலை எழுதினார்.

அன்றுமுதல் இப்போது வரை அவர் எங்கள் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு நல்ல பாடலை கேட்டேன். அதை எழுதியவரை தேடிப்பிடித்து அழைத்து வரும்படி கூறினேன். ஆனால், அதையும் வைரமுத்துவே தான் எழுதியிருந்தார் என்று பின்னர் தெரிந்தது.

என்னை ஆண்டவன் என்று அழைக்கின்றனர். ஒரு பக்கம் நான், இல்லை இல்லை என்று சொன்னாலும் அப்படியே என்னை அழைக்கிறார்கள். இந்த விழாவில் என்னை பகுத்தறிவு பகலவன் என்று சொல்லி கோஷம் எழுப்பினர். ஆண்டவன் என்று சொல்வதைவிட பகுத்தறிவு பகலவன் என்று அழைப்பது நன்றாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

‘‘கமல்ஹாசனுக்கு நானும் ஒரு ரசிகன் தான். அவரை ஆழமாக அறிந்த ரசிகன். கமல் தமிழில் நடிக்கும் உலக கலைஞன். அவரது தாய்மொழி தமிழ் என்றாலும், உலகம் முழுவதும் அறியப்படுபவராக இருக்கிறார்.

திரையுலகம் குமிழியில் கட்டிய கூடாரம். எப்போது வேண்டும் என்றாலும் உடையும். ஒருவர் 5 ஆண்டுகள் சினிமாவில் இருக்கலாம். இன்னொருவர் 10, 15 ஆண்டுகள் இருக்கலாம். சரித்திரம் படைத்த ஜாம்பவான்கள் 25, 30 ஆண்டுகள் வரை இருந்துள்ளனர். ஆனால் 50 ஆண்டுகளாக சினிமாவில் இருப்பவர் கமல்.

ஒரு சின்ன தடை வந்தாலும், திரையுலகில் இருந்து அகற்றப்பட்டுவிடுவார்கள். நஷ்டம், வருமான வரி சோதனை, கோர்ட்டு தீர்ப்பு, தோல்வி போன்ற பிரச்சினைகள் அவர்களை அப்புறப்படுத்திவிடும். ஆனால், கமல் எல்லாவற்றையும் கடந்து 50 ஆண்டுகள் பயணப்பட்டு கொண்டிருக்கிறார்.

மரங்கள் வெட்டப்படலாம். சுவர்கள் இடிக்கப்படலாம். ஆனால் வெளிச்சத்தை வெட்டமுடியாது. கமல் ஜீவ ஜோதியான வெளிச்சமாக இருக்கிறார். அவரது பெயர் ஹாலிவுட்டுக்கே தெரியும். உழைப்பை நம்புகிறவர்.

அவரது வயது 60 ஆக இருக்கலாம். ஆனால் 30 என்று எங்கள் மனது சொல்கிறது. கமல் வெற்றி பெறுவது தமிழ் பட உலகுக்கு நல்லது. அவர் சம்பாதிக்கிற பணம் மீண்டும் தமிழ் பட உலகத்திலேயே புரள்கிறது’’.

இவ்வாறு அவர் பேசினார்.

திரிஷா பேசும்போது, ‘கமல்ஹாசன் மனிதநேயமிக்கவர். யாருக்கு என்ன பிரச்சினை வந்தாலும் உதவி செய்வார். அவருடன் 2-வது தடவையாக இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

விழாவில், நடிகர்கள் விஷால், தனுஷ், பொன்வண்ணன், கருணாஸ், நடிகை சுருதிஹாசன், டைரக்டர்கள் கவுதம் மேனன், பாண்டிராஜ், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts