என்னை திட்டிய ரவிசாஸ்திரி மீது நடவடிக்கை எடுக்கவும் – ஆடுகள பராமரிப்பாளர் கடிதம்

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 25-ந் தேதி நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்ததுடன், தொடரையும் இழந்தது. இதில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் குவித்தது. அந்த அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து சாதனை படைத்தனர்.

ground-india-pitch

இந்த போட்டி முடிந்ததும் இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் மும்பை வான்கடே ஆடுகள (பிட்ச்) பராமரிப்பாளர் 70 வயதான சுதிர்நாயக்கை தகாத வார்த்தைகளால் திட்டியதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக சுதிர் நாயக் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்தார். இந்த நிலையில் ஆடுகள பராமரிப்பாளர் சுதிர் நாயக் சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எப்பொழுது மும்பையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்தாலும், எந்த மாதிரியான பிட்ச் தயாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து குறைந்தபட்சம் போட்டிக்கு 10 முதல் 12 நாட்களுக்கு முன்பே எங்களுக்கு தகவல் வந்து விடும்.

ஆனால் இந்த முறை எங்களுக்கு பிட்ச் குறித்து எந்தவித தகவலும் வரவில்லை. எனவே நாங்கள் நல்ல பேட்டிங் பிட்ச்சை தயாரித்தோம். போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுக்கு வந்த தகவலில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டு இருந்தது.

ஆடுகளம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதால் அவர்கள் கேட்டபடி எங்களால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் எங்களால் முடிந்த அளவுக்கு ஆடுகளத்தில் மாற்றம் செய்தோம். புற்களை முழுமையாக வெட்டினோம். லேசாக ரோலிங் செய்தோம். போட்டிக்கு ஒரு நாளைக்கு முன்பு ஆடுகளத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் தண்ணீர் விடும்படி அணி நிர்வாகத்தினர் கேட்டனர். அது சரியான ஆலோசனை அல்ல என்பது பிட்ச் பராமரிப்பாளர் என்ற முறையில் எனக்கு தெரிந்தது.

அப்படி செய்தால் பிட்ச் இரண்டு விதமாக தெரியும். இந்திய கிரிக்கெட் வாரிய ஆடுகள பராமரிப்பாளர் திரஜ் பிரசன்னாவும் ஆடுகளத்தில் தண்ணீர் விட வேண்டாம் என்று எனக்கு ஆலோசனை வழங்கினார். தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் முடிந்ததும் ரவிசாஸ்திரி என்னை பார்த்து சபாஷ். மிகவும் நல்ல ஆடுகளம் சுதிர் என்றார். நான் பதிலுக்கு நன்றி என்று கூறினேன். பின்னர் வீரர்கள் அறைக்கு செல்லும் போது ரவிசாஸ்திரி என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மீதும் நான் புகார் தெரிவித்து இருக்கிறேன்.

அவர் என்னுடைய உதவியாளர் ரமேஷ் மகமுன்கரிடம் நைசாக பேசி ஆடுகளத்தில் தண்ணீர் ஊற்றும்படி கூறி இருக்கிறார். அத்துடன் நான் சொல்வதை கேட்க மறுப்பது ஏன்? என்றும் மிரட்டியும் இருக்கிறார். எனது உதவியாளரை திட்ட பரத் அருணுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவரது பணி பவுலர்களுக்கு பயிற்சி அளிப்பது தான்.

ரவிசாஸ்திரி என்னை அவமதித்தது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் திலிப் வெங்சர்க்கார், இந்திய கிரிக்கெட் வாரிய ஆட்ட மேம்பாட்டு மானேஜர் ஆர்.எஸ். ஷெட்டி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். இதுபோன்ற செயல்கள் மாநில கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் வாரியம் இடையே நிலவும் ஒற்றுமையை சீர்குலைக்க கூடியதாக அமையக்கூடும். எல்லை மீறி செயல்பட்ட ரவிசாஸ்திரி, பரத் அருண் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் ஆடுகள பராமரிப்பாளர் சுதிர் நாயக்கை, ரவிசாஸ்திரி வசைபாடிய பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. ‘பிட்ச்’ மோதல் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவரும், முன்னாள் வீரருமான திலிப் வெங்சர்க்காரை வைத்து விசாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அவர், இரு தரப்பினரிடமும் சம்பவம் பற்றி விசாரிப்பார். பின்னர் தனது அறிக்கையை வருகிற 5-ந்தேதி நடக்கும் மும்பை கிரிக்கெட் சங்க கூட்டத்தில் சமர்ப்பிப்பார். அவரின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்தின் மற்றொரு துணைத்தலைவர் ஆஷிஷ் ஷிலார் தெரிவித்தார்.

Related Posts