என்னை ஆதரிக்க கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை – சஜித்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை ஆதரிக்க எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆதரவைப் பெறுவதற்காக யாருடைய நிபந்தனைகளுக்கும் இணங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “தன்னை ஆதரிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை. நிபந்தனைகளுக்கு அடிபணியும் நபர் நான் அல்ல என்று முன்னரே தெளிவாக கூறியிருக்கிறேன். ஏனைய கட்சிகளுடன் கொள்கை ரீதியான உடன்பாடுகள் மட்டுமே உள்ளன. நிபந்தனைகள் இல்லை” என தெரிவித்துள்ளார்

மேலும் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா, என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர், தனது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரது ஆதரவையும் வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts