என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது என்று மீண்டும் கூறியுள்ளார் கௌதம்.
தோல்விகளால் துரத்தப்பட்டு தமிழ் சினிமாவின் விளிம்புக்கு சென்ற கௌதமை மீண்டும் மையத்தில் உட்கார வைத்துள்ளது, என்னை அறிந்தால்.
தன்னுடைய ஸ்கிரிப்டோ இயக்கமோ இதற்கு காரணமல்ல, அஜீத் என்ற நடிகரின் ஸ்டார் பவரே காரணம் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது. என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்பதே இன்று அவர்முன் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய ஆசை.
யாருக்கு எப்போது எதை செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்துகிறவர் அஜீத்.
முதுகில் அறுவை சிகிச்சை நடந்து, இனி அஜீத்தால் பழையபடி நடிக்க முடியுமா என்று கேள்வி எழுந்த நேரத்தில், ஸ்ரீ சூர்யா மூவிஸுக்காக அஜீத்தை ஒப்பந்தம் செய்திருந்த ஏ.எம்.ரத்னம் அவரை படத்திலிருந்து நீக்கினார்.
அந்த சோதனையில் இருந்து அஜீத் மீண்டெழுந்தார். அப்போதுதான், தவறு செய்துவிட்டோமே என்று ரத்னத்துக்கு உறைத்தது.
அன்றிலிருந்து அஜீத்தின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பூங்கொத்து அளித்து வந்தார் ரத்னம். ஆனால் அஜீத் அவரை கண்டுகொள்ளவில்லை. ரத்னம் விரும்பியும் அவரது தயாரிப்பில் நடிக்கவில்லை.
வரிசையாக படங்கள் தோல்வியுற்று, அவர் கைதூக்கிவிட்ட பிரபல நடிகர்கள் அவரை ஒதுக்கி, இனி வனவாசம்தான் என்று முடிவான நேரம் அஜீத்தே அழைத்து ஆரம்பம் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ரத்னத்துக்கு அளித்தார்.
ஒரே படத்தில் கடன்களை அடைத்து நிமிர்ந்தார் ரத்னம். இப்போது அவருக்கு இரண்டே சாமிகள், சாய் பாபாவும், அஜீத்தும்.
அதேபோல்தான் கௌதமும். வரிசையாக தோல்வியுற்று துருவநட்சத்திரம் படத்தை எடுத்தால்தான் வாழ்க்கை என்ற நிலையில் சூர்யா அப்படத்திலிருந்து விலக, ஆபத்பாந்தவனாக வந்து என்னை அறிந்தால் பட வாய்ப்பை கௌதமுக்கு அளித்தார். கௌதமுக்கு இப்போது அஜீத் கடவுளுக்கும் மேலே.
என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தில் கௌதம் ஆர்வம் காட்டுவதற்கும் அஜீத் மௌனம் காட்டுவதற்கும் ஸ்கிரிப்டுக்கு மேல எவ்வளவோ விஷயங்கள். ரசிகர்களுக்கு இது புரியுமா?