என்னை அடிபணிய வைக்க முடியாது: அனந்தி எழிலன்

Ananthy - elilanமிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணிய வைக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘யாழ்.நகரில் ஆளும்தரப்பும் அதனது பங்காளிகளும் இணைந்து கண்டன ஊர்வலமெனும் நாடகமொன்றை அரங்கேற்றியிருக்கின்றனர். ஜெனீவாவில் இலங்கை விவகாரம் கையிலெடுக்கப்படுகின்ற வேளையிலெல்லாம் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் அதன் பின்னணிகள் பற்றி எமது மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அதிலும் மக்கள் எனும் பேரினில் இவ் ஊர்வலங்களின் பின்னாலிருக்கும் தரப்புக்களையும் எமது மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

இலங்கையின் ஜனநாயக அரசியலில் மக்கள் உணர்வுகளை காலில் மிதித்து அவர்களது கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு தடைப்போட்டு சட்டத்தை கையிலெடுப்பவர்கள் தமக்குதாமே எந்தவித அனுமதியும் பெறாது சுலபமாக கண்டன ஊர்வலங்களை நடாத்த முடிகின்றது.

அதுவே தமிழ் தரப்புக்களாயின் எத்தனை தடைவை நீதிமன்ற படியேற வேண்டியிருக்குமென்பதும் மக்கள் அறிந்ததே.
புதன்கிழமை யாழ்.நகரினில் நடந்த ஊர்வலம் அத்தகையது என்பதை எமது மக்களிற்கு சொல்லி தெரியப்படுத்த வேண்டிய தேவையில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் அதிலும் குறிப்பாக என்மீதும் சேறுபூசும் வகையிலும் அழைத்துவரப்பட்டவர்கள் கைகளினில் திணிக்கப்பட்ட சுலோக அட்டைகளும் நோக்கத்தை தெளிவாக்கி நிற்கின்றது.

அதிலும் தமிழை அப்பட்டமாக கொலைசெய்து கொச்சையாக எழுதப்பட்ட சுலோக அட்டைகள் எவரால் அவை எழுதப்பட்டவை என்பதை சொல்லி நிற்கின்றன. இவற்றிற்கு அப்பால் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்கென கிழக்கிலிருந்து பலாத்காரமாக அழைத்துவரப்பட்ட போராளிகள் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடிபணியவைக்க முடியாதென்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை மீண்டுமொருமுறை சொல்லிக் கொள்ளவிரும்பும் அதேவேளை எனது மக்களிற்காக நான் குரல் எழுப்புவதினில் பின்வாங்கப் போவதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

முள்ளிவாய்க்காலில் இருந்து கணவனையும் பிரிந்து அநாதரவாக எனது மூன்று பெண் குழந்தைகளுடன் வந்த என்னை என் தேசமும் உறவுகளுமே அடைக்கலம் தந்து மீட்டெடுத்தனர்.

அவ்வகையில் நான் எனது தேசத்திற்கும் மக்களிற்கும் மரணிக்கும்வரை விசுவாசமாக இருக்கவேண்டியவளாக இருக்கின்றேன்.

காணாமல் போயுள்ள எனது கணவர் முதல் அனைத்து காணாமல் போனவர்களிற்காகவும் நான்குரல் எழுப்பியே வருகின்றேன்.

சிறைகளினில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல் எழுப்புவேன்.

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களது மேம்பாட்டிற்கும் முன்னாள் போராளிகளது நிம்மதியான வாழ்விற்காகவும் நான்போராடுவேன். எந்தவொரு மிரட்டலுமோ அச்சுறுத்தும் ஊர்வலமோ என்னை தடுக்கப்போவதில்லை.

இவற்றையெல்லாம் நான் தேர்தலில் குதிப்பதற்கு முன்னதாக சந்தித்திருக்கிறேன். அச்சுறுத்தலற்ற வாழ்க்கையை நான் எப்போதோ தொலைத்துவிட்டேன்.

எமது மக்களை போல என்னிடமும் இழப்பதற்கு ஏதுமில்லை என்பதை சொல்லிக்கொள்வதுடன் மக்களிற்காக சமரசமின்றி குரல் எழுப்புவேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

Related Posts