வடமாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை. சேனாதிராசாவா, விக்னேஸ்வரனா என்ற சர்ச்சை பூதாகரமாகியுள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதில் தனக்கு பெருவிருப்பு இல்லை என்றும் அரசியலில் தனக்கு அனுபவம் இல்லை என்றும் உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாவை சேனாதிராஜாவிடம் அரசியல் அனுபவம் நிறைவே இருக்கிறது என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நேற்றுக்காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன “விடியும் வேளை’ நிகழ்வில் தொலைபேசி ஊடாக கலந்துகொண்டு பேசியபோதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது
அரசியலில் எனக்கு அனுபவம் கிடையாது. சட்ட ரீதியில் நிர்வாக ரீதியில் எனக்கு அனுபவங்கள் உள்ளன.
மறுபுறம் மாவை சேனாதிராசாவுக்கு அரசியலில் நிறையவே அனுபவம் உண்டு. முதலைமச்சர் பதவிக்காக எனக்கு பெரிய விருப்பு இல்லை. ஆனாலும், வெளிநாடுகளிலிருந்தும், பல தரப்புக்களில் இருந்தும் படித்த தமிழர்கள் எனக்கு அழைப்புக்களை மேற்கொண்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனால்தான் இதனை நான் பரிசீலித்து வருகிறேன் என்றார்.