Ad Widget

என்னையும் எனது குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள்

என்னுடன் குரோதம் இருந்தால் என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள். அதைவிடுத்து எனது பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எமது ஆட்சிக் காலத்தில் குடிசைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக வசதியான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹுங்கம அத்புடுவ விஹாரையில் இடம்பெற்ற மத வைபவத்தில் உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று அரசியல் ரீதியாக கைது செய்யப்படுபவர்கள் உளரீதியாக மட்டுமல்ல உடல் ரீதியாகவும் இம்சிக்கப்படுகின்றனர். இன்று எப்.சி.ஐ.டி, சி.ஐ.டி. என்பன நாட்டு மக்களையும் அரசியல்வாதிகளையும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும் நிறுவனங்களாக மாறியுள்ளன.

அரசியல்வாதிகளை சிறையில் அடைத்து அவர்களுக்கு மன உளைச்சளை ஏற்படுத்துவது மட்டுமின்றி உடல் ரீதியாகவும் இம்சைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இவ்வாறு நாட்டு மக்கள் மீது அரசு அழுத்தங்களை பிரயோகிக்கின்றது. செல்வந்தர்களிடம் வரி அறவிடுவதாகத் தெரிவிக்கும் அரசாங்கம் இன்று குடிசை வாழ் மக்களிடம் வரிகளை அறவிட ஆரம்பித்துள்ளது. சாப்பாட்டுப் பொதி வாங்கினாலும் சிறு பிள்ளைகள் இனிப்புகளை வாங்கினாலும் அவற்றிற்கும் வற்வரி அறவிடப்படுகின்றது.

எமது ஆட்சிக்காலத்தில் குடிசைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக வசதியான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால் இன்று குடிசைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

நாடு முன்னேற்றமடைவதையே நாமும் விரும்புகிறோம். எமது பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டாம். என்னோடு இருக்கும் குரோதத்திற்காக எமது பிரதேச மக்களை பழிவாங்காதீர்கள். கிராமங்களை அபிவிருத்தி செய்யுங்கள்.

என்னையும் என் குடும்பத்தினரையும் சிறையில் அடையுங்கள் ஆனால் மக்களை இம்சிக்க வேண்டாம் என்றார்.

Related Posts