என்னுடன் தொடர்பு வைத்திருந்ததால் அதிபர் இராஜதுரை சுட்டுகொல்லப்பட்டார்: டக்ளஸ்

அதிபர் க.இராஜதுரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு பல்வேறு வளங்களைப் பெற்றுக் கொடுத்தவர். ஆனால் அவர் என்னுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

central-cooege

“இந்தக் கல்லூரியின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்தளவு உதவிகளை செய்து வருகின்றேன்.

இந்நிலையில் இக்கல்லூரியினதும் எமது மக்களினதும் மேம்பாட்டுக்காகவும் உழைத்த காலம் சென்ற முன்னாள் அதிபர் க.இராஜதுரையை நினைவு கூறுவது இன்றைய நாளில் சாலப் பொருத்தமானதாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்காக 10 இலட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவினை புதன்கிழமை (09) மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“இச்சிறுவர் பூங்கா, மாணவர்களின் கற்றல் மற்றும் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் முகமாகவும் அவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை வளர்த்தெடுக்கும் முகமாகவும் எதிர்காலத்தில் இதனை விஸ்தரிப்பதற்கான ஏற்பாடுகள் நிச்சயம் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் கல்லூரி சமூகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மகிந்தோதைய தொழில்நுட்பப் பீடத்தை நிர்மாணிப்பது தொடர்பில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடவுள்ளேன்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்திலுள்ள நீச்சல் தடாகம் நவீன முறையில் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, பழைய மாணவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் நீச்சல் தாடகம் அமைந்துள்ள ஒரேயொரு பாடசாலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்பதுடன், குறித்த நீச்சல் தடாகத்தில் நீச்சல் பயிற்சிகள் இடம்பெற்று வரும் அதேவேளை வெளிநபர்கள் பாவனை செய்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts