எனது மகன் தலைமுடி வெட்ட சலூனுக்கு போனபோது இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டார் என மகனைக் காணாத தாயொருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.
காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 7ஆவது அமர்வு இன்று முழங்காவில் மத்தியகல்லூரியில் நடைபெற்று வருகின்றது. அதன் போது சாட்சியமளிக்கும் போதே தாயொருவர் சாட்சியமளித்தார்
அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,
நாங்கள் வவுனியாவில் இருந்தோம். எனது மகன் வீட்டில் இருந்து தலைமுடி வெட்டுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
யார் பிடித்துச் சென்றனர் என்று தெரியாது. ஆனால் எனது மகன் எங்கே என்று இதுவரை எனக்கு தெரியாது. எல்லா இடமும் தேடி அலைந்து விட்டோம். எங்கும் என் பிள்ளை இல்லை.
எனது மகன் பிடிபடும் போது 13 வயது. எனது மகன் பிடிபடுவதற்கு முன்னர் எனது மகளின் கணவரை இராணுவம் வந்து வீட்டில் வைத்து பிடித்துச் சென்றனர். அதற்குப் பின்னர் தான் எனது மகனும் காணாமல் போனார்.
எனது மகனைக் காணாத கவலையில் கணவர் மனநோயாளி ஆகிட்டார். தற்போது ஒவ்வொரு மாதமும் வவுனியாவிற்கு மருந்துக்கு போய் வருகின்றோம்.
வருமானம் எதுகும் இல்லை. பஸ்சிற்கு பணம் செலுத்தவும் மிகவும் கஸ்ரப்படுகின்றோம்.இன்றைக்கு இங்கு வரக்கூட 30 ரூபா ஒருவரிடம் கடன்வாங்கித்தான் வந்தேன்.
எனக்கு எனது மகன் உயிரோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளை நம்பிக் கொண்டு மகன் வருவார் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்றார்.