எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும்! – அரசியல் கைதியின் தாயார்

எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும் என சிறையில் உள்ள அரசியல் கைதியின் தாயார் ஒருவர் தெரிவித்தார்.

thangamma-vavuniya-iluppaikulam-

கொடிய யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்படாமல் பல துன்பங்களை அனுபவிப்பது மட்டுமன்றி அவர்களது குடும்பமும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என பல தடவை உண்ணாவிரதங்களை மேற்கொண்டனர்.

அரசியல் தலைவர்களாலும் நல்லாட்சி ஜனாதிபதியினாலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருந்தது. சில கைதிகள் கடும் நிபந்தனை பிணையுடன் விடுவிக்கப்பட்டனர் சிலருக்கு புனர்வாழ்வு வழங்கபட்ட பின் சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் எனவும் நீதிமன்ற வழக்கில் உள்ள அரசியல் கைதிகளின் விசாரணை துரித படுத்தப்படும் எனவும் கூறப்பட்டமையினால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சிறையில் வாடும் மகன் ஒருவரின் தாயார் தனது மகன் விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையெனில் தன்னை மாய்த்து கொள்வதை தவிர எனக்கு வேற வழியில்லை என வவுனியா நகர் இலுப்பைக்குலத்தை சேர்ந்த சுப்பிரமணியம் தங்கமணி உருக்கமான முறையில் தெரிவித்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு வவுனியா வேலைக்காக சென்ற எனது மகனை செட்டிகுளம் பொலிசார் சந்தேகத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு ஒன்பது வருடங்களுக்கு மேலாகியும் எனது மகன் விடுதலை செய்யப்படாமல் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளான் அவனுடைய விடுதலைக்காக நான் பல சொத்துக்களை இழந்துள்ளேன் இவ்வாறு இழந்தும் எனது மகன் விடுதலை செய்யப்படவில்லை.

யுத்தத்தினால் யாழ்ப்பாணத்திலிருந்து பல பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து தற்போது வவுனியா மாவட்டத்தில் சொந்த காணி கூட இல்லாமல் வாடகை வீட்டில் இருந்து வருகின்றேன். எனது கணவனை யுத்த காலத்தில் இராணுவம் தாக்கியமையினாலும் மகனை பிரிந்து வாழ்வதனாலும் மன,உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் வேலைக்கு செல்ல முடிவதில்லை எனது மகளின் வருமானத்திலே எனது குடும்பம் இயங்குகின்றது மகள் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கின்றாள் கெமிக்கல் ஒவ்வாமை காரணமாக அவளுக்கு முடி கொட்டுகின்றது கை தோல் உரிகின்றது வேறு வருமானம் இல்லாத காரணத்தினால் அவ்வேலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம். எனது மற்றொரு மகனையும் பிரிந்து வாழ்கின்றேன் அவன் ஐந்தாம் ஆண்டு படிக்கின்றான் இங்கு வைத்து படிக்க வசதியில்லாத காரணத்தினால் எனக்கு தெரிஞ்சவங்கள் கண்டியில் இருக்கிறாங்கள் அவங்களோடு இருந்து படிக்கிறான் சிறு வயதிலே தாய் இருந்தும் தனியாக வாழ்கிறான்.

வீட்டில் இரு வயோதிபர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உடல் நலம்பாதிக்கப் பட்டவர்கள் அவர்களை குழந்தைகள் போல் பாதுகாக்க வேண்டும் என்னுடைய மகன் விடுதலை செய்யப்படிருந்தால் நான் இப்படியான துன்பங்களை எதிர் நோக்க தேவையில்லை மகள் வேலைக்கு செல்லாத வேளைகளில் பட்டினி கூட இருப்போம் எனவேதான் எத்தனை நாளுக்கு மகன் வருவான் விடுதலையாவான் என காத்திருப்பது அதனால்த்தான் எனது மகன் விடுதலை செய்யப்படவில்லையாயின் என்னை மாய்த்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க உருக்கமான கூறினார்.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அறிக்கை மட்டுமே விடுகிறார்களே தவிர எந்தொவொரு உதவிகளையும் செய்வதில்லை தேர்தல் காலங்களில் மட்டும் வீடு தேடி வருவார்கள் நாங்கள் சமூகத்தினாலும் அரசாங்கத்தினாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்கபடுகின்றோம் என எண்ண தோன்றுகின்றது.

Related Posts