“நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு இடம்பெறவுள்ள எனது பயணம் வேகமான பயணம் அல்ல. இது மெதுவான பயணம் என்பதால் மீள்திருப்பம் இல்லை.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை நாட்டில் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கட்சியை முழுமையாக மறுசீரமைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாடு பொலனறுவை – கதுறுவெலவில் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது,
“எனது பயணம் மிகவும் வேகமற்றது. அமைதியான, பின்திரும்பாத வேகமற்ற பயணமே நான் பயணிக்கின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியை அமைப்பதற்கு மனச்சாட்சிக்கு ஏற்ப தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன.
அதனால் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாக கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். 1956 ஆம் ஆண்டு முதல் இதுவரை காலமும் கட்சிகளுக்கு இடையில் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான போட்டித் தன்மையும், வைராக்கியமும் காணப்பட்டது.
எனினும், தற்போது நாட்டின் தேவைக்கு ஏற்ப அனைத்தையும் மாற்றியமைக்கும் அவசியம் காணப்படுகின்றது. வைராக்கிய அரசியலை விட்டு கட்சியை மறுசீரமைப்புக்கு உட்படுத்தி புதியதொரு பாதையில் பயணிக்க வேண்டியை அடையாளப்படுத்தி, செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்பவற்றை அறிந்துகொண்டு, புரிந்துகொண்டு முன்செல்ல வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அனைவருக்கும் தெளிவு அவசியம்” – என்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் 30 வருட காலமாக நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால இதன்போது கூறினார்.