நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து கொண்டு இருந்த என்னை அரசியலுக்கு அழைத்து என் அமைதியை கெடுத்தவர் அமைச்சர் மனோகணேசன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர்களால் அமைக்கப்படவுள்ள மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1875களில் தென்னிந்திய திருச்சபையினால் சாவகச்சேரியில் உருவாக்கப்பட்ட இக்கல்லூரி தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓர் கலங்கரை விளக்காக அக்காலத்தில் அமைந்திருந்தது.
இப்பாடசாலை அக்காலத்தில் மாணவர் விடுதி வசதிகளைக் கொண்டிருந்தமையால் வன்னிப்பகுதியில் இருந்து பல மாணவர்கள் இப்பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்விகற்கக் கூடிய வசதிகள் காணப்பட்டன.
சிறப்பாகச் செயற்பட்ட இப்பாடசாலை பல்வேறு காரணங்களினால் கற்பித்தல் செயற்பாடுகளில் பின்நோக்கி செல்லத் தொடங்கிய போது சாவக்சேரி இந்துக்கல்லூரி முழு வளர்ச்சி பெற்றது அண்மைக் கால வரலாறு.
டிறிபேர்க் கல்லூரி மீண்டும் ஒரு முறை தனது பழைய தராதரத்திற்கு உயர்ச்சி பெறும் என்று நான் எதிர் பார்க்கின்றேன். உங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறுவதால் நீங்கள் தைரியமாக முன்னேற முடியும்.
சர்வதேச பழைய மாணவர்கள் ஒன்றியத்தினால் இக் கல்லூரிக்கு மாணவர் விடுதி ஒன்றை அமைப்பதற்காகக் காணி துண்டொன்று விலைக்கு வாங்கப்பட்டது மட்டுமன்றி அதில் 100 மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்கக்கூடிய விடுதியொன்றையும் நவீன வசதிகளுடன் முற்றுமுழுதாக பழைய மாணவர்களின் நிதி உதவியுடன் கட்டித்தரவிருப்பது உங்கள் முன்னேற்றத்திற்கான ஒரு அறிகுறி என்று கூறலாம்.
இவ்வாறு விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்கின்ற மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான முழுச் செலவீனங்களையும் இந்த சர்வதேச பழைய மாணவர் ஒன்றியம் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்ற ஒரு நல்ல செய்தியையும் நேற்றைய பத்திரிகைகளில் கண்ணுற்றேன்.
இந்த நல்ல கைங்கரியங்களை முன்னின்று ஆரம்பித்து வைப்பதற்காக கௌரவ அமைச்சரும் எனது நெருங்கிய நண்பருமாகிய திரு.மனோகணேசன் அவர்கள் இங்கே வருகை தர இருந்தார்கள். ஏனோ இன்னமும் வரவில்லை.
நான் நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து வந்திருந்தேன். அதில் மண் அள்ளிக் கொட்டக் காரணமாயிருந்தவர்களில் ஒருவர் நண்பர் மனோகணேசன் அவர்கள். மற்றவர்கள் தனிப்பட்ட முறையில் வலிந்தழைத்தார்கள் என்றால் நண்பர் மனோகணேசன் அவர்கள் கூட்டம் வைத்தே என்னை அரசியலுக்கு அழைத்தார்.
என் அமைதியைக் கெடுத்துவிட்டு அவர் இப்பொழுது அமைச்சராகி விட்டார்! அவர்களை இன்முகத்துடன் இச் சந்தர்ப்பத்தில் இங்கு வரவேற்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஏனோ இன்னமும் அவர் வரவில்லை.
இப்பாடசாலை தென்மராட்சி மாணவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என மட்டுப்படுத்தாமல் வன்னிப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மலையகப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் இங்கே வந்து தங்கி தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய வகையில் மாணவர்களின் விடுதி மற்றும் இதர தேவைகள் பற்றிய ஒழுங்குகள் பழைய மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்திருக்கின்ற காரணத்தினால் பொருளாதார வசதி குறைந்த திறமை மிக்க மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாக அமையும்.
உங்கள் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் திரு.அருந்தவபாலன் அவர்கள் ஒரு திறமையான அதிபராக விளங்கி இக்கல்லூரியை வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னெடுத்துச் சென்ற போதும் அவரின் பணிகள் கல்லூரியுடன் மட்டும் நின்றுவிடாது இப்பகுதியைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் அவரின் உயரிய சேவை கிடைக்கப் பெற வேண்டும் என்ற உங்கள் அனைவரதும் விருப்பத்தின் படி திரு.அருந்தவபாலன் அவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர் விருப்பு வாக்கு எண்ணிக்கையில் ஒரு சில வாக்கு வித்தியாசங்களில் வெற்றி வாய்ப்புக்களை நழுவவிட்டது ஒரு துர்ப்பாக்கியம் என்றே கருதுகின்றேன்.
இன்றைய இந்த அடிக்கல் நாட்டு வைபவம் டிறிபேர்க் கல்லூரியின் மீள்வளர்ச்சிக்கான முதல் மைல்கல்லாக அமையட்டும். அனைவரும் ஒன்றுசேரப் பாடுபட்டு இந்தச் சாவகச்சேரி மண்ணிலே முன்போன்று மூன்று பாடசாலைகள் சமாந்தர வளர்ச்சிகளைப் பெற்று வருகின்றன என மக்கள் போற்றத்தக்க வகையில் இக்கல்லூரி மீண்டும் வளர்;சியுற வேண்டும் அதற்கு நீங்கள் யாவரும் கூட்டாகப் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.