‘எனக்கு பிடித்த நடிகை சமந்தா’ என்று நடிகர் விக்ரம் கூறினார்.
நடிகர் விக்ரமும், நடிகை சமந்தாவும் ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் மில்டன் டைரக்டு செய்துள்ளார். ‘பாக்ஸ் ஸ்டார்’ பட நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார்.
இந்தபடம் குறித்து விக்ரம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
‘10 எண்றதுக்குள்ள’ படம் காதல் கதை. திகிலும் இருக்கும். நான் கார் டிரைவராக வருகிறேன். இதை படமாக்கும்போதே நல்ல கதை என்ற உணர்வு ஏற்பட்டது. டிரைலர், பாடல்களுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
நானும் சமந்தாவும் தொடர்பே இல்லாதவர்களாக வருவோம். ஒன்றாக பயணிப்போம். காதலை சொல்லமாட்டோம். ஆனாலும் கதையோடு அதுவும் வரும். டைரக்டர் விஜய் மில்டன் கதாபாத்திரத்துக்கு ஏற்ப என்னை மாற்றினார். திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர். கதை, கதாபாத்திரங்கள் எல்லாமே புதுசாக இருக்கும்.
சமந்தா கதாபாத்திரம் எளிதானது கிடையாது. யாராலும் நடித்துவிடவும் முடியாது. ஆனாலும் அந்த கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்தார். சமந்தா எனக்கு பிடித்த நடிகை. சிறந்த புத்திசாலி. எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்து இருக்கிறார். எல்லோரும் கஷ்டப்பட்டு நடித்துள்ளோம்.
எனது முந்தைய தில், தூள் படங்கள் காதல் படங்களாக இருந்தாலும் அதோடு சில சமூக விஷயங்களும் இருந்தது. அதுமாதிரி ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் கதையும் இருக்கும்.
ஏ.ஆர்.முருகதாஸ் என்னிடம் 3 கதைகள் சொல்லி இருக்கிறார். வாய்ப்பு அமையும் போது அவர் படத்தில் நடிப்பேன். டைரக்டர் பாலா எப்போது அழைத்தாலும் அவர் படத்தில் நடிப்பேன்.
எல்லா நடிகர்களுக்குள்ளும் ஒரு டைரக்டர் உண்டு. நடிகர்களால் சும்மா நடித்து விட்டுப்போக முடியாது. கதை, நடிப்பு, சண்டைக்காட்சி ஒவ்வொன்றிலும் அக்கறை எடுத்து பொருத்தமாக வந்துள்ளதா? என்று பார்ப்போம். டைரக்டர்களிடம் சில திருத்தங்களையும் சொல்வோம். ஆனாலும் திருத்தங்களை ஏற்பதும் ஏற்காததும் டைரக்டர் முடிவு. நான் டைரக்டர் ஆவேனா? என்பதை 5 வருடங்களுக்கு பிறகுதான் சொல்ல முடியும்.
இவ்வாறு விக்ரம் கூறினார்.
பேட்டியின்போது டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் மில்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.