இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது இராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது குறித்த எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் சட்ட பூர்வமான நடவடிக்கையை சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம், எனவும் அவர் கூறியுள்ளார்.
போரின் போது பாலியல் பலாத்காரக் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் சரத் பொன்சேகா இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் இந்திய அமைதிப்படை 1987 ஜூலை முதல் 1990–ம் ஆண்டு மார்ச் வரை இலங்கையில் முகாமிட்டிருந்தது. அப்போது அவர்கள் மீது இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டன. அதேபோன்று ஈழப்போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்துக்கு எதிராக இது போன்ற குற்றச்சாட்டுகள் பரப்பபட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணைக்கு அதாவது இலங்கை அரசு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் கடந்த 2000–ம் ஆண்டு எட்டு தமிழர்களை சுட்டுக்கொன்ற இராணுவ வீரருக்கு கடந்த ஜூன் மாதம் கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதுபோன்று உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டால் இதுபோன்று நியாயமான தீர்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் உள்நாட்டில் வெளிநாட்டு நிபுணர்கள் உதவியுடன் ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தப்பட்டாலும் நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.