ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை எந்த நிமிடத்திலும் தமிழக அரசு விடுதலை செய்யலாம் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளவன், நளினி, முருகன், சாந்தன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களை மாநில அரசுக்கு உள்ள அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கடந்த ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்படி தற்போது 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து மத்திய அரசிடம் கருத்து கேட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை பேரறிவாளன் வழக்கறிஞரான புகழேந்தியை தமிழக அரசு தரப்பில் தொடர்பு கொண்டு 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான நடவடிக்கைகளுக்காக வேலூருக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு இது தொடர்பாக ஒரு கடிதம் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறையில் உள்ளவர்களில் முருகன், சாந்தன், ராபர் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஈழத் தமிழர்கள். ஆகையால் 7 பேரையும் விடுதலை செய்த பின்னர் இந்த 4 பேரையும் செய்யாறு அகதிகள் முகாமுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆகையால் எந்த நிமிடத்திலும் 7 தமிழரை விடுதலை செய்யும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது