நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வடமாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.
யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் கௌரவ ஆளுநர் தலைமையில் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 91 அலுவலக உதவியாளர்கள் , 4 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (குடிசார்) மற்றும் 11 குடியேற்ற அலுவலர்கள் உள்ளிட்ட 106 உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றும் போது ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு ஆளுநர் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நியமனக்கடிதம் வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் இந்த தேசத்தை கட்டியெழுப்ப போகவுள்ள ஆரம்ப பணியை செய்யப்போகும் மக்கள் நீங்கள். ஒரு நிறுவனத்தில் காரியாலய சேவகனை சந்தித்தே நிறுவனத்தின் தலைவரை சந்திக்கின்றனர். எனவே மக்களுக்கும் அரசிற்கும் மத்தியிலுள்ள சிறந்த பாலமாக நீங்கள் இருக்கவேண்டும். அரசியல் விடயங்களை புறம்தள்ளி மனிதாபிமானத்துடனும் இறை பயத்துடனும் உங்கள் தொழிலை நீங்கள் செய்வீர்கள் என்று விண்ணப்பம் வைக்கின்றேன் என்று ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார்.