எந்த உதவியும் வேண்டாம் சொந்த இடத்துக்கு விடுங்கள் ;- வலி.வடக்கு மக்கள்

mallakam_campஎங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம், சொந்த மண்ணில் குடியமர்த்தினாலே போதும், நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக்கொள்வோம். எனவே சொந்த இடம் திரும்ப விடுங்கள்.

இவ்வாறு வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் ஜப்பான் பிரதிநிதிகளிடம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர். யாழ்.மாவட்டத்துக்கு நேற்று ஜப்பான் தூதரக அரசியல் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி தலைமையிலான குழுவினர் வருகைதந்தனர்.

இவர்கள் வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கிவாழ்ந்து கொண்டிருக்கின்ற மல்லாகம் கோணப்புலம் முகாமுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தனர். இதன்போதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

வலி.வடக்கு மக்கள் ஜப்பான் பிரதிநிதிகளிடம் மேலும் தெரிவித்ததாவது
நாங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி 23 வருடங்கள் கடந்துள்ளன. இன்னமும் எங்களின் இடங்களை இராணுவம் பிடித்து வைத்திருக்கின்றது. எங்களை மீளக்குடியமர்த்துமாறு கேட்டால் கண்ணிவெடியைக் காரணம் காட்டுகின்றனர்.

அப்படியானால் எமது மண்ணில் இராணுவத்தினர் தோட்டம் செய்யும் போது அந்தக் கண்ணி வெடிகள் எல்லாம் எங்கு போய்விட்டன. எங்களுக்கு நீங்கள் எந்த உதவியும் செய்துதர வேண்டாம் எங்களைச் சொந்த இடங்களுக்கு விடுவித்தாலேயே போதும் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொள்கின்றோம் எமது இடங்கள் வளமான பூமி அதனைவிடுவிக்க நடவடிக்கை எடுங்கள் இதுவே போதும் என்றார்.

Related Posts