எந்திரன் 2-ம் பாகத்தில் ரஜினி, அமீர்கான்? தமிழ், இந்தியில் தயாராகிறது

ரஜினியின் ‘எந்திரன்’ படம் 2010 அக்டோபரில் வெளிவந்தது. நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்தார். ஷங்கர் இயக்கினார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.

rajini-amirkan

இப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு கணிசமான லாபத்தையும் சம்பாதித்து கொடுத்தது.

இதன் 2–ம் பாகத்தை விரைவில் எடுப்பேன் என்று ஷங்கர் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்கான கதையையும் தயார் செய்து விட்டார். 2–ம் பாகத்தில் யார் நடிப்பார்? என்று பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் ரஜினியை ஷங்கர் திடீரென சந்தித்து பேசினார். இதையடுத்து எந்திரன் 2–ம் பாகத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இருவரும் எந்திரன் 2–ம் பாகம் கதை பற்றி விவாதித்தார்களாம். இதர நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு, தயாரிப்பு செலவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்த படத்தை ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டு எடுக்க உள்ளனர். இதனால் இந்தி நடிகர் அமீர்கானையும் இதில் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இந்தி, தமிழ் ஆகிய இருமொழிகளில் நேரடி படமாக இதை எடுக்கின்றனர். தெலுங்கு, ஆங்கில மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

ரஜினி, அமீர்கான் இணைந்து நடிப்பதன் மூலம் படத்துக்கு உலகளாவிய மார்க்கெட் கிடைக்கும். பெரிய அளவில் வியாபாரமும் ஆகும்.

இதன் மூலம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அதிக செலவில் இந்த படத்தை எடுக்கலாம் என ஷங்கர் கருதுகிறார். இந்த வருடம் இறுதியில் படப்படிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts