எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தயாரில்லை: ஜனாதிபதி

தாய்நாட்டுக்காக போராடிய எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அரசாங்கம் தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியின் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்குதல் மற்றும் விருசர சலுகை அட்டைகளை படைவீரர்களுக்கு வழங்கும் நிகழ்வில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி

’தாய்நாட்டுக்காக போராடிய வீரமிகு படையினரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும், நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் வீரமிக்க படையினர் தொடர்பில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தான் பொறுப்புடன் செயற்படுகின்றேன்.

இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்திராத சர்வதேச நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இந்த யுகத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ளது. அதன் பயன் என்னவென சிலர் கேள்வி எழுப்புகின்றனர் இந்த சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தையும் வீரமிக்க படையினரையும் பாதுகாப்பதற்கு பயன்படுத்த படுகின்றது.

இலங்கையின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதுடன் படையினர் தொடர்பில் எழும் சிக்கலான நிலமைகளின் போது நேரடியாக இலங்கையுடன் இருப்பதாக உலகின் பலமிக்க அரச தலைவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

போர் இடம்பெற்ற காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய படை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் போர் வீரர்கள் தொடர்பில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தான் பொறுப்புக் கூறுவதாக அனைவரிடமும் தெளிவாக தெரிவித்துள்ளேன்.

அத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்பற்ற விடயங்களில், அதாவது ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்களின் கொலை, தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் யாராவது ஒருவர் தவறிழைத்திருந்தால், அவர் எந்த தரத்திலிருந்தாலும் அவரை பாதுகாக்கும் இயலுமை தனக்கு இல்லை ’ என தெரிவித்தார்.

Related Posts