இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ‘மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் உத்தியோகபூர்வமாக தரையிறக்கப்பட்ட முதல் விமானத்தில் ஜனாதிபதி வந்திறங்கியதுடன் விமான நிலையத்தினையும் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
இதேவேளை, மத்தல விமான நிலைய சேவைக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிடி ஒப் மாகம் றுஹுணுபுற’ விமானமும் நேற்று முதன்முறையாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் இவ்விமானத்திலேயே ஜனாதிபதி,மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
எதையும் மூடிவிட்டு புதியதை திறக்கமாட்டேன்: ஜனாதிபதி
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு விடும் என பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால், எதனையும் மூடிவிட்டு புதியதை நான் திறக்கமாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இருப்பதை கட்டியெழுப்பிக்கொண்டு புதிய திட்டங்களை உருவாக்குவதே மஹிந்த சிந்தனையின் பிரதான நோக்கமாகும். அதற்காக சர்வதேச கடன்களை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“நாட்டை அபிவிருத்தி செய்யும்போது விமர்சகர்கள் உருவாகுவார்கள். அவர்களுக்கு அபிவிருத்தியின் ஊடாகவே பதிலளிக்க வேண்டும். அத்துடன் நாட்டை அடகுவைக்கவும் நான் தயாரில்லை” என்றார்.
புலிகளும் வான் தாக்குதல் நடத்தினர்
எமது நாட்டில் 1912 ஆம் ஆண்டு கொழும்பு குதிரை பந்தையத்திலேயே முதன்முறையாக விமானம் தரையிறங்கியது. அதற்கு பின்னர் இரத்மலானையில் தரையிறங்கியது.
இரண்டாவது உலக யுத்தக்காலத்தில் அதாவது, 1940 களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டது.
உலக யுத்தக்காலத்தில் கொழும்பிலும் திருகோணமலையிலும் குண்டுகள் வீசப்பட்டன. விடுதலைப்புலிகளும் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தினர்.
இலங்கைக்கு பருப்பும் போடப்பட்டது
1986 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது புலிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதேபோல 1987 ஆம் ஆண்டு வானிலிருந்து இலங்கைக்கு பருப்பும் போடப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் கோடிக்கணக்கான ரூபாய் நட்டம் ஏற்பட்டது.
இரணைமடுவிலிருந்து புலிகளின் விமானம் கொழும்புக்கு வந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடாத்தின. அன்றைய காலத்தில் புதிய விமான நிலையங்கள் உருவாக்குவது அல்ல இருக்கும் விமானங்களை பாதுகாப்பதே பெரும் பிரச்சினையாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
எனக்கு ஆசனம் ஒதுக்கப்படவில்லை
இங்கிலாந்திலிருந்து ஒருமுறை நான் நாட்டுக்கு திரும்புவதற்கு தயாராகி கொண்டிருந்தபோது விமானத்தில் எனக்கு ஆசனம் ஒதுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாட்டில் குறிப்பிட்ட சில காலத்திற்குள் சமாதானத்தை ஏற்படுத்தினேன்.
பஞ்ச சக்திகளில் விமான பலத்தையும் கட்டியெழுப்பி நாட்டை ஆசியாவிலேயே ஆச்சரியமிக்கதாக மாற்றுவேன்.
நாட்டின் அபிவிருத்தியை நோக்காககொண்டே மத்தல விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்தலவில் விமானங்கள் தரையிறங்கும் போது நாட்டின் அபிலிருத்தி மேலோங்கும். மத்தலவில் விமானம் தரையிறங்கும் போது அது ஊவா,சப்ரகமுவை மட்டுமன்றி முழு நாட்டின் பெறுமதியையும் உயர்த்தும்.
நாட்டை எங்களுடைய வருமானத்தில் அபிவிருத்திச்செய்யமுடியாது. சர்வதேச கடன்களை பெற்றுக்கொள்ளவேண்டும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கட்டிக்கொடுத்தது போல இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தையும் கட்டிக்கொடுத்துள்ளது.
சர்வதேச கடன்களை பெற்றே நாட்டை அபிவிருத்தி செய்துக்கொண்டிருக்கின்றோம். சாப்பிடுவதற்காக நாங்கள் கடன் பெறவில்லை, நாட்டை அபிவிருத்தி செய்யவே கடன்களை பெற்றுள்ளோம். கடன்களை பெற்றமையினால் பின்னடையவில்லை பின்னடையவும் மாட்டோம்.
உப்புவண்டி சில்லுகளின் சுவடுகள்
பலம்வாய்ந்த நாடுகளும் கடன்களை பெற்றே நாட்டை அபிவிருத்தியின் பாதையில் கொண்டுசெல்கின்றன.
ஹம்பாந்தோட்டை லுகம்வேரவிலிருந்து ஊவாவுக்கு உப்பு ஏற்றிச்சென்ற உப்புவண்டி சில்லுகளின் சுவடுகள் இருந்த வீதிகள் இன்று கார்பட் செய்யப்பட்டுள்ளன.
காட்டுயானைகளின் அட்டகாசம் மட்டுமன்றி குடிநீர்கூட இல்லாத பிரதேசமாகவே இந்த பிரதேசம் இருந்தது. இன்று அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் நிலவும் காலநிலையை தாங்கிக்கொண்டால் எதனையும் தாங்கிக்கொள்ளலாம் என்றும் ஜனாபதி சொன்னார்.
நாட்டை அடகுவைக்க தயாரில்லை
நாட்டின் வருமானம் நல்லசெயற்றிட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். அதேபோல நாட்டை அடகுவைக்கவும் நான் தயாரில்லை என்றும் அவர் சொன்னார்.
நகரத்திலுள்ள வசதிகளை கிராமங்களுக்கு கொண்டுச்சென்றுள்ளோம். அதேபோல கிராமங்களிலுள்ள இயற்கைவளம் சார்ந்த நல்லவிடயங்கள் கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கும் கொண்டுச்செல்லப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,அனுராதபுரம்,திருக்கோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பிரதேசங்களில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இரணைமடுவுக்கு உள்ளக விமான சேவை
சுதந்திரம் மற்றும் கலாசாரத்தை பாதுகாத்து வாழவேண்டும். அதேபோல கிராம மக்களின் கனவு நனவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.உலகத்தை இன்னும் இன்னும் இலங்கைக்கு அண்மித்துக்கொள்வதற்கான அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையில் இலங்கையை மாற்றுவேன்.
அது மட்டுமன்றி பலாலி,நுவரெலியா,அனுராதபுரம்,இரணைமடு ஆகிய இடங்களுக்கு இடையில் உள்ளக விமான சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றார்.