எது பாரதூரமானது? 12,000 புலிகள் விடுதலையா? 38 தமிழ்க் கைதிகள் பிணையில் விடுவிப்பா? – ரணில்

12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை கடந்த ஆட்சியில் விடுதலை செய்தது பாரதூரமானதா? அல்லது 38 தமிழ்க் கைதிகளை பிணையில் விடுவித்தமை பாரதூரமானதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்களின் மீதான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த தரப்பு அணியினர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பதிலளிக்கும் முகமாகவே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கேள்வியை எழுப்பினார்.

“மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில்தான் 12 ஆயிரம் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது 38 பேர் மட்டுமே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அப்படியென்றால் எது பாரதூரமானது. 12 ஆயிரம் பேர் விடுதலையா அல்லது 38 பேர் பிணையில் விடுவிப்பா?” என்று அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இனவாத பேச்சுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் விக்கிரமசிங்க, “இனவாதம் பேசுவதென்றால் ஒழுங்கான இனவாதி ஆக்குங்கள். அதையும் உங்களால் செய்ய முடியாது” என்று கூறினார்.

இதேநேரம் கடந்த ஆட்சியின்போதே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் புலிகளால் கொல்லப்பட்டதன் பின்னர் அந்த அமைப்புடன் ஒப்பந்தம் செய்து அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டதாகவும், புலிகளால் மாவிலாறு அணைக்கட்டு மூடப்பட்டபோது அத்துரலிய ரத்னதேரர் அங்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்காவிட்டால் புலிகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்காது என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன், “பிரபாகரனுக்கு பணம் கொடுத்தமை தவறு என்று சொல்லுங்கள். அதையும்கூட உங்களால் சொல்ல முடியாது” என்றும் அவர் இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எதிரணித் தரப்பினர்களைப் பார்த்துக் கூறினார்.

மஹிந்த ராஜபக்‌ஷவே உண்மையில் ஜெனிவாவில் படையினரைக் காட்டிகொடுத்ததாகவும் அதிலிருந்து படையினரைப் பாதுகாக்கவே தற்போதைய அரசு செயற்பட்டு வருவதாகவும் கூறிய பிரதமர் விக்கிரமசிங்க, உரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்றும், அதில் கைச்சாத்திட எவரும் அழுத்தம் கொடுக்கவுமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

Related Posts