இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பாதையை நோக்கி பயணிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வில் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையும் என தெரிவித்த அவர், பொறுப்புக் கூறல் நல்லிணக்கம் மற்றும் நிலைத்திருக்கக் கூடிய சமாதானம் என்பவற்றை நிறைவேற்றுவதற்கான பயணத்தை நோக்கி இலங்கை செல்வது பாராட்ட வேண்டியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பை மறுசீரமைத்தல், சுயாதீன நிறுவனங்களை புதுப்பித்தல் மற்றும் கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கான சூழ்நிலையை உறுதிப்படுத்தல் ஆகியன தொடர்பில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பலமான சமிக்ஞைகள் தென்படுகின்றதாகவும் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.