எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்: கமல்

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் கமல்ஹாசன், தன் டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் உலகநாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முதல்படத்திற்கே குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற கமல், அதன்பின்னர் திரையில் செய்த சாதனைகள் ஏராளம்.

கமலுக்கு நேற்று 63வது பிறந்தநாள். பொதுவாக கமலின் பிறந்தநாள் என்றால் அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் எல்லாம் செய்து திருவிழா போல் கொண்டாடுவார்கள். நடிகர் கமலும் தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கூறியிருந்தார். அதன்படி ரசிகர்களும் கமலின் வேண்டுகோளை ஏற்று பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தனர். ஆனாலும் கமலுக்கு ஏராளமானபேர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களிலும் போனிலும் வாழ்த்துக்களை குவித்துவிட்டனர். இதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இதுப்பற்றி கமல், தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது… ”அன்பு ரசிகர்களுக்கும் மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்களுக்கும் மேலும் நன்றிக்கடன் பட்டேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related Posts