எதிர்க்கட்சி தலைவர் அத்துமீறவில்லை; இராணுவமே அத்துமீறியுள்ளது

கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாமிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டவிரோதமாக அத்துமீறி நுழையவில்லை என்றும் இராணுவமே அத்துமீறியுள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது,

“கடந்த சில நாட்களாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பலாத்காரமாக நுழைந்ததாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

அந்தப் பிரதேசத்தை வந்து பார்க்குமாறு எதிர்க்கட்சி தலைவரிடம் மக்கள் கூறியதால் அவர் அங்கு சென்றார். சென்ற போது வாசலிலே தடை ஒன்று இருந்தது. அவருடைய வாகனத்தை கண்டதும் தடையை நீக்கி அவரை செல்ல வழிவிட்டனர். அவருடைய வாகனமும் இன்னும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் சென்றனர்.

அவர் பலாத்காரமாக செல்லவில்லை. சட்டவிரோதமாக செல்லவில்லை. சட்டவிரோதமாக பலாத்காரமாக யாராவது ஏதாவது செய்திருக்கிறார்கள் என்றால் அது இலங்கை இராணுவம் தான் சட்டவிரோதமாக தனியாருடைய வீடுகளிலும் காணிகளிலும் குடி கொண்டிருக்கிறார்கள்.

உரிமையாளர்கள் அங்கு சென்று வாழ்வதற்கு இராணுவம் இடம்வழங்காமைதான் பிரச்சினையாக இருக்கிறது. ஆகவே ஏதாவது ஒரு விசாரணை நடத்த வேண்டுமென்று யாராவது கேட்டால், அது இராணுவத்திற்கு எதிராகவே.

எதிர்க்கட்சி தலைவர் சென்ற இடத்தில் இராணுவம் ஏன் பலாத்காரமாக சட்டவிரோதமாக பொது மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலே குடிபுகாத வண்ணம் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து தான் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

Related Posts