மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி இடம்பெற்ற துரதிர்ஷ்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
இந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளது.இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கான அணைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும், இப்படியான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதனை உறுதி செய்யவும் வேண்டும் என, நான் கோரிக்கை விடுக்கிறேன்.
இந்த இக்கட்டான நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாடுபடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த சம்பவத்தில் காயமுற்றோருக்காக நான் வேண்டுவதுடன் அவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன்.
இந்த துர்ப்பாக்கிய நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கும் எமது சகோதர சகோதரிகளுக்கு எமது ஒற்றுமையை வெளிக்காட்ட முன்வருமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டிந்தது.