எதிர்க்கட்சித் தலைவருக்கு வடக்கு முதலமைச்சர் பதிலடி!!

கூரை மேல் ஏறி குறை கூறிப் பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார். நாம் எதுவும் செய்ய முடியாது. அவரது கட்சி அவரை எதிர்க் கட்சிப் பதவியில் இருந்து நீக்கும் அவர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருக்கின்றாரே அதைப் போன்றுதான் முடியாதது என்று எதுவும் இல்லை.

இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா நேற்றுமுன்தினம் கேள்வி – பதில் வடிவ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவேன் என்று வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுகின்றார் என்றும், கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம் என்றும் அதில் குறிப்பிட்டு வடக்கு முதலமைச்சரைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூரை மேல் ஏறி குறை கூறி பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார் என்று குறிப்பிட்டு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவைக் கடுமையாகச் சாடியுள்ளார். அதில் உள்ளதாவது-,

பொலிஸாருடனும், நீதியுடனும் தொடர்புபட்டவன் நான். குற்றவாளிகள் சம்பந்தமாக தொழில் ரீதியாக நான் பல வருட காலம் செயற்பட்டவன். இப்போது கூடப் பல தடயங்கள் எனக்குத் தரப்பட்டுள்ளன. ஆனால் வேலிகள் பயிரை மேய விடக் கூடாது. சட்ட ஒழுங்கு எனக்குப் பரீட்சயமான துறை. ஆனால் அதற்கு அதிகாரம் கையில் இருக்க வேண்டும். அதிகாரம் இல்லாது எம்மால் செயலாற்ற முடியாது. எமது அதிகாரங்களை மற்றையவர்கள் மடக்கிப் பிடித்ததால் தான் நாம் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம்.

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மாகாண சபைச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை மட்டும் படித்துவிட்டு அவற்றைப் பத்திரிகைகளுக்கு ஒப்பித்தால் மட்டும் போதாது. ஏனைய சட்டங்கள் எவ்வாறு மாகாண சபையை வளைத்துப் பிடித்துச் செயலற்றதாக்குகின்றன என்பதையும் உணர வேண்டும்.

உள்ளூராட்சி முன்னேற்றம் நகர அபிவிருத்தித் துறையால் கட்டுப்படுத்தப்படுகின்றது. காணிகள் மீதான எமது உரித்து மகாவலிச் சட்டத்தால் நலிவடைகின்றது. மாகாணப் பாடசாலைகளின் முன்னேற்றம் தேசியப் பாடசாலைகளை வைத்துக் கட்டுப்படுத்தப்படுகின்றது. எமது மருத்துவமனைகளின் முன்னேற்றம், தேசிய மருத்துவனைகளை வைத்து மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகுின்றது. சுகாதார அதிகாரியின் நிர்வாகம் கூட மாகாணத்துக்கு வழங்கப்படவில்லை. மாகாணப் பொது நிர்வாகம் கூட ஆளுநரின் நிறைவேற்று அதிகாரங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதிருந்த தவராசா வானம் ஏறி அவைத் தலைவர் ஆசியால் வைகுண்டத்திலேயே இப்பொழுது காலம் கழிக்கின்றார் என்பதை மறந்து விட்டார்.

நண்பருக்கு தெரிந்தவை பற்றி அல்லது அவருக்கு வேண்டியவை பற்றி அவர் பேசுகிறார். அவை அவருக்குக் கிடைகாததால் எம் மீது கோபம் கொள்கின்றார். முழு வட மாகாண நிர்வாகத்திலும் அவருக்கு நன்மை தரும் விடயங்களைத்தான் நாங்கள் இதுகாறும் கவனித்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார். அவை செய்யப்படாவிட்டால் எமது செயற்பாடு செயற்றிறம் அற்றது என்கிறார்.

தப்பித்தவறி அவர் முதலமைச்சராக வந்தால் (கடவுள் அதனைத்தடை செய்வாராக!) அவ்வாறான நடவடிக்கைகளில்தான் ஈடுபடுவார் என்று தெரிகின்றது. அபிவிருத்தித் திட்டங்களை நான் தான் இங்கு கொண்டு வந்துவிட்டேன் என்று மார்தட்டிக் கூறி அரியாசனத்தில் இருப்போரின் அடியை ஆசையுடன் பற்றிச் செயற்படுவார் போலத் தெரிகின்றது. உரிமைகள் இல்லாமல் உதவியை நாடுவது எம் உருக்குலைவுக்கு வழிவகுக்கும்.

அவர் அடுத்த தேர்தலில் தமக்கு வழி அமைக்க என்னைச் சீண்டுகின்றார். முதலில் தனக்கு வாக்களிக்கப் போகும் மக்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றட்டும். அவர்கள் நன்மதிப்பைப் பெறட்டும். என்னுடன் மோதி மக்களின் நன்மதிப்பைப் பெறலாம் என்று அவர் நினைத்தால் அது அவரின் பகல் கனவாகும்.- என்றுள்ளது.

Related Posts