எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும்: டக்ளஸ்

ஊடகம் என்பது மக்களுக்கு உண்மைகளையும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

media con02

மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பான ஊடகக் கருத்தரங்கு, யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (11) இடம்பெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்க தகவல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் பாரபட்சமற்ற வகையில் இவ்வாறான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் மூன்று மொழிகளில் ஊடகங்கள் தமது செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஊடகம் என்பது மக்களுக்கு உண்மைகளையும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் செயற்பட வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக சில ஊடகங்கள் அவ்வாறு நடக்கவில்லை. இவ்வாறு கடந்த காலங்களில் ஊடகங்களின் தவறான வழிநடத்தல் காரணமாக மக்கள் அவலத்திற்குள் தள்ளப்பட்டனர். இவ்வாறான மனித அவலங்களுக்கு ஊடகங்களும் முக்கியமான காரணமாக இருந்துள்ளன.

கடந்த காலங்களில் மக்களுக்கு ஊடகங்கள் சரியான தகவல்களை வழங்காத காரணத்தினால்தான் இந்நிலை ஏயேற்பட்டதை நினைவுப்படுத்துகிறேன்.

இந்த கலந்துரையாடல் மூலம் உங்களது அனுபவங்களை மட்டுமன்றி அதனூடாக உங்களது திறமைகளை மேலும் மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரட்ன அத்துகல, ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எ.எச்.எம்.அஸ்வர், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.

அத்துடன், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தகவல் திணைக்களப் பணிப்பாளர் வசந்தப்பிரிய உள்ளிட்ட தகவல் திணைக்களத்தின் துறைசார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts