எதிர்காலத்தில் மண்ணெண்ணெயின் விலை அதிகரிக்கப்படும் – ரணில்

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் தொகை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல நாள் மீன்பிடி கப்பல்களுக்கு டீசல், எரிவாயு, மளிகை பொருட்கள் மற்றும் ஐஸ் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் துறையினர் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “நாட்டின் மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முன்னர் குறிப்பிடப்பட்டவாறு மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏனெனில் மீன்பிடி தொழிலை பாதுகாக்க முடியும். இது ஒரு முக்கியமான படியாகும்.

இந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் போது குறிப்பாக மீன்பிடித் தொழிலுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.

மீனவர்களின் இன்றைய நிலைக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களிடம் குறைந்த அளவு எரிபொருளும் உள்ளது. எப்படியிருந்தாலும் நாங்கள் பகிர்ந்து கொள்ள வேலை செய்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts