தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற பின்னர் வடக்கிற்கு முதல் தடவையாக கடந்த வாரம் வந்திருந்தார்.
அவர் இங்கு மூன்று நாள் தங்கி நின்று பல்வேறு நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்துகொண்டார். முதல் நாள் தந்தை செல்வா நினைவுத்தூபிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின் நல்லூருக்குச் சென்று வழிபட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற சம்பந்தனுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மறுநாட்களில் வலி.வடக்கு பிரதேசத்துக்கு சென்ற சம்பந்தன் அண்மையில் மீள்குடியேறிய மக்களை சந்தித்து உரையாடினார். அத்துடன் மாவிட்டபுரம் கந்தசுவாமி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களில் வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் முதமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் எவரும் பங்கேற்கவில்லை.
அதேவேளை, வடக்கு மாகாணசபை உறுப்பினர்களில் ஒரு சிலர் மட்டுமே சம்பந்தன் கலந்துகொண்ட நிகழ்வுகளில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது வடக்கு மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் ஆரம்பித்த பனிப்போர் இன்னமும் தொடர்வதனால்தான் வடக்கு முதலமைச்சரின் கீழ் இயங்கும் மாகாண அமைச்சர்களும் சம்பந்தனின் வடக்கு வருகை நிகழ்வுகளைப் புறக்கணித்திருக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை உதயன் விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நடத்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், “கூட்டமைப்பின் தலைமைக்கும் வடக்கு முதலமைச்சச்ருக்கும் இடையில் தற்போது ஒற்றுமை இல்லாத நிலை தொடர்வது ஏன்” என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பதிலளிக்கும்போது –
“நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் சற்று மௌனமாக இருந்தோம். அவருடன் விரைவில் பேசவுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கேள்விக்கு சம்பந்தன் பதிலளிக்கும்போது மேலும் தெரிவிக்கையில் – “வடக்கு முதலமைச்சரால் கூறப்பட்ட சில கருத்துக்கள் எங்களுடைய மனதில் சில கேள்விகளை எழுப்பியுள்ளன. தேர்தல் காலத்தில் அந்த விடயங்களுக்கு நாங்கள் பதில் சொல்வது அதிகம் பொருத்தமானதாக இருக்கவில்லை.அதற்குப் பின்னர் ஐ.நா. அமர்வு இடம்பெற்றது. “அந்த நேரத்திலும் நாங்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கூறுவது அல்லது எங்களுக்குள் குழப்பம் இருப்பதாக தென்படுவது அதிகம் பொருத்தமான ஒரு விடயமாக அமைந்திருக்காது. அந்தக் காரணத்தின் நிமித்தம் நாங்கள் இந்த விடயங்களைப் பற்றி சற்று மௌனமாக இருந்தோம். ஆனால், இந்த விடயம் சம்பந்தமாக விரைவில் முதலமைச்சருடன் பேச இருக்கின்றேன்” – என்று கூறியிருந்தார்.