மாகாண சபை ஒன்றில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் பிரேரணைகளை நிறைவேற்றுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. இதனைத் தெரிந்தும் வடமாகாணசபையை ஆளும் அரசியல்வாதிகள் இவ்வாறு பிரேரணைகணை நிறைவேற்றுவது வியப்பளிக்கிறது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை அமைக்கவேண்டுமென வட மாகாணசபையின் பிரேரணைகளை நிறைவேற்றும் போது நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராஜதந்திர அணுகுமுறையின்றி வட மாகாண சபை செயற்படுகின்றது. குறிப்பாக தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என அறிவித்துள்ள நிலையில் வட மாகாண சபை இவ்வாறு செய்கின்றமை வருத்தமளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு தொடர்பில் வட மாகாண சபை பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.