எண்ணெய் கசிவு வழக்கு; ஜனவரி 14இல் கட்டளை பிறப்பிக்கப்படும்

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்படும் என மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின், சுன்னாகம் நோர்தன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவொயில், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால், சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறி, தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 11 பேர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளின் பிரதிநிதிவாதியாக நோர்தன் பவர் நிறுவனம் மற்றும் உத்துரு ஜனனி திட்டம் ஆகியன குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் செவ்வாய்க்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நோர்தன் பவர் நிறுவனத்தால் இந்த எண்ணெய் கசிவு ஏற்படவில்லை எனவும் இதனால், வழக்கை தள்ளுபடி செய்யும்படி நோர்தன் பவர் நிறுவனம் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றில் கோரினார்கள்.

எனினும் வழக்கை தள்ளுபடி செய்வதற்கு மனுதாரர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது என்பதற்கான அறிக்கையை, மனுதாரர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதவான், இந்த வழக்கு தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி பிறப்பிக்கப்படும் எனக்கூறி நீதவான் இரண்டு வழக்குகளையும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related Posts