சிறையில் இருந்து எண்ணி இரண்டே மாதத்தில் வந்துவிடுவேன் என சசிகலா அவரது ஆதரவு எம்எல்ஏக்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கான வழிகளை ஜெயலலிதா தனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரையும் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டனர். ஆனால் நேற்று பொழுது முழுவதையும் சென்னைக்கு வெளியே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் கழித்த சசிகலா நேற்றிரவு தான் அங்கிருந்து புறப்பட்டார்.
அங்கிருந்த போது தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய சசிகலா தீர்ப்பு 4 ஆண்டு சிறை என்று வந்துள்ளது. ஆனால் எண்ணி இரண்டே மாதங்களில் நான் வெளியே வந்துவிடுவேன் எனக்கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, “நான் இப்போது உங்களை விட்டு போகிறேன். எனக்கு நான்கு வருடம் சிறை என தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் அது நடக்காது.
எனக்கு எல்லா வழிகளையும் அம்மா அதாவது நான் அக்கா குட்டிம்மா என அழைக்கும் எனது தோழி அம்மா ஜெயலலிதா ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அதனால் இரண்டே மாதத்தில் நான் வெளியே வந்துவிடுவேன்.
அதுவரை எனது உடல் தான் சிறைக்குள் இருக்கும் உயிர் எல்லாம் இங்கு தான் இருக்கும், எனக்கு நாளை வரை நேரம் உள்ளது.
இப்போது போயஸ் கார்டன் தான் செல்கிறேன். அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் தான் பெங்களூரு செல்வேன். போயஸ் கார்டனையும் அம்மாவின் சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டும்.
எனது முழுமையான விசுவாசி எடப்பாடி பழனிச்சாமி. அவர் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்வார். நான் எண்ணி இரண்டே மாதங்களில் இங்கு வந்து விடுவேன் நீங்கள் கேட்டதும் கேட்காததும் நிறைவேறும்” இவ்வாறு சசிகலா ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார்.
21 ஆண்டுகள் நீடித்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறைக்கு செல்லாத சசிகலா அசால்டாக 2 மாதங்களில் வெளியே வந்து விடுவேன் எனக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.