எட்டி உதைத்த பிள்ளையை செருப்பால் அடித்த வைத்தியர்!

தனது தாயின் மடியிலிருந்த பிள்ளையொன்று, வைத்தியரை, இரண்டு முறை உதைத்ததால் ஆத்திரமடைந்த வைத்தியர், அக்குழந்தையை எட்டி உதைத்ததுடன், செருப்பில் அடித்த சம்பவமொன்று மொறட்டுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மொறட்டுவை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையமொன்றை நடத்திச் செல்கின்ற வைத்தியரே

இவ்வாறு மிகமோசமான முறையில் நடந்துகொண்டுள்ளார் என்று, மொறட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தன்னுடைய தாய் மட்டும் பாட்டி சகிதம், களுத்துறை பிரதேசத்தில் வசித்துவருகின்ற இந்தக் குழந்தை, திடீரென கீழே விழுந்ததுள்ளது. அவ்வாறு விழுந்த குழந்தை தொடர்ச்சியாக வாந்தியும் எடுத்துள்ளது.

சற்றுப் பதற்றமடைந்த குழந்தையின் தாய், அக்குழந்தையை தூக்கிக்கொண்டு, மேற்படி வைத்தியசாலைக்கு விரைந்துள்ளார்.

அந்த வைத்தியசாலையில் இருந்த வைத்தியர். தாயின் மடியிலிருந்த குழந்தையை பரிசோதித்துள்ளார். குழந்தையோ, தன்னைப் பரிசோதித்த வைத்தியரை எட்டி உதைத்துள்ளது. ஒரு முறையல்ல, இரண்டு முறை உதைத்துள்ளது.

ஆத்திரமடைந்த வைத்தியர், தன்னுடைய கதிரையில் இருந்து எழுந்து, தாயின் மடியிலிருந்த குழந்தையை பதிலுக்கு எட்டி உதைத்துள்ளார். போதாக் குறைக்கு, தன்னுடைய செருப்பைக் கழற்றி, குழந்தையை அடித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், மொறட்டுவை பொலிஸ் நிலையத்தில் அந்தத் தாய் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த வைத்தியரையும் அழைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குழந்தை அடித்தமையால், தானும் அடித்ததாக விசாரணையின் போது வைத்தியர் ஒத்துக்கொண்டுள்ளார்.

எனினும், தாயின் கோரிக்கைக்கு அமைவாக சம்பவம் சமரசப்படுத்தப்பட்டதுடன், கடும் எச்சரிக்கை செய்து வைத்தியரை விடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts