எச்.ஐ.வி வதந்தியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கொழும்பில் கல்விகற்க வாய்ப்பு

வடமேல் மாகாணத்துக்குட்பட்ட குளியாபிட்டிய பிரதேசத்தில், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்ற வதந்தியால், பாடசாலைக் கல்வியைப் பெறும் வாய்ப்பை இழந்திருந்த 6 வயது சிறுவனை, கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இச்சிறுவனின் பாடசாலைக் கல்வி வாழ்க்கை முடிவுறும் வரையில், புலமைப் பரிசில் திட்டமொன்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ள மேற்படி மாணவனின் தாயாரிடமிருந்து அம்மாணவனைப் பிரித்து, விடுதியொன்றில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஏற்கெனவே தெரிவித்த கருத்தொன்று, இணையத்தளங்களில் பரவ ஆரம்பித்ததை அடுத்து, இப்பிரச்சினை மேலும் சூடு பிடித்தது.

மேற்படி மாணவனுக்கும் எச்.ஐ.வி தொற்று காணப்படுவதாகக் கூறி, அம்மாணவனை இணைத்துக்கொள்ள குளியாபிட்டிய பாடசாலை நிர்வாகமொன்று மறுப்பு தெரிவித்தது.

இதனையடுத்து, இப்பிரச்சினை சூடுபிடிக்க ஆரம்பித்ததை அடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த மாணவனின் தாயாருடன் தொலைபேசியில் உரையாடியதோடு அம்மாணவனுக்குப் பாடசாலையொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி வழங்கினார்.

இதேவேளை, அந்த சிறுவனின் கல்வி நடவடிக்கைகளை எவ்வித தடங்கலுமன்றி தொடர்வதற்கு, தனியார் நிறுவனமொன்று நிதி உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது சிறுவனின் தாய்க்கு வீடொன்றை வழங்கி, சிறுவன் தனது தாயுடனேயே இருப்பதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

தாயிடமிருந்து சிறுவனை பிரிக்க நேரிடலாம் என்று, தான் கூறிய தகவல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், ‘இந்தச் சிறுவனும் அவரது தாயும் வாழ்ந்த வீடு, அவர்களது சூழ்நிலை, தாயின் சுகாதாரம் ஆகியவை காரணமாகஅப்பகுதி மக்களுக்கு ஒரு பீதி இருந்து வந்ததாகவும் அதனால் சிறுவனின் நலனைக் கருத்திற்கொண்டு, சில காலம் அவரை தாயிடமிருந்து பிரித்துவிட்டு, இந்தப் பிரச்சினை தணிந்தவுடன் சிறுவனை தாயுடன் சேர்ப்பதற்கு திட்டமிட்டுதான் அவ்வாறு கூறினேன். தற்போது பரவிய வதந்தியானது, இனிவரும் காலத்தில் சிறுவனை பாதித்துவிடக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன்’ எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts