அரசியலானது மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. எமது அரசியல் யாப்பும் எமக்குப் போதிய அதிகாரங்களை வழங்கவில்லை. எங்கள் பிரச்சினைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்படும் வரை எம் மக்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உரிய திட்டங்களுக்கேற்ப எமது வெளிநாட்டு,உள்நாட்டு உறவுகளின் உதவியுடன் முன்னேறுவதுதான் உசிதம் என்று எனக்குப் படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்.
வடமராட்சி கோவிற் கடவை சனசமூக நிலையத் திறப்புவிழா துன்னாலை மத்தி கரவெட்டியில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-
நண்பர் நடராஜன் அவர்கள் கூறினார் நீங்கள் ஓர் அடி எடுத்துவைத்தால் நாங்கள் நூறுஅடி எடுத்துவைப்போம் என்று. இப்பொழுதுதான் அம்மாவின் பார்வை எங்கள் பக்கம் விழுந்துள்ளது. ஐயாவின் பார்வையும் எம்மீது திரும்பினால் நூறு என்ன, நூற்றிஐம்பது என்ன, ஆயிரம் அடிகள் உங்களை நோக்கி எடுத்துவைப்போம் என்பதைக் கூறிவைக்கின்றேன்! நான் முதலமைச்சராகப் பதவியேற்ற காலத்தில் இருந்து எமது மக்கள் அனைவரையும் சென்று பார்த்து அளவளாவி அவர்களின் பிரச்சினைகளை அறிந்து இயலக்கூடிய பரிகாரங்களைத் தேடவேண்டும் என ஆவல் கொண்டிருந்தபோதும் தொடர் வேலைப்பழுக்கள் அரசியல் நெருக்கடிகள் ஆகியவற்றின் காரணமாகநாம் நினைத்த விடயங்கள் அனைத்தையும் விரைவாகச் செய்யமுடியவில்லை.
இன்று பத்திரிகைகளை புரட்டினால் கொலை, கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம் எனப் பக்கம் பக்கமாகச் செய்திகள் காணப்படுகின்றன.
மிகவும் பண்பட்ட சமுதாயமாக சிறந்த பழக்க வழக்கங்களுடன் கல்வியிலும் சிறந்துவிளங்கிய இந்தச் சமூகம் சீர்கெட்டுப் போவதை,வேண்டும் என்றே திட்டமிட்டு அழிக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டு வாளாதிருக்கமுடியாது.
இவ்வாறான செயல்களைக் கண்காணிக்கக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய சக்தி இவ்வாறான சனசமூக நிலையங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.
இதன் காரணமாகவே பொலிஸாருடன் பொதுமக்கள் சேர்ந்து எடுக்கக் கூடிய சில நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்ந்து அதற்கான குழு அமைக்கவேண்டியவற்றைச் செய்துவருகின்றோம்.
விரைவில் மேல்மட்ட, நடுத்தர, கீழ்மட்ட குழுக்கள் செயற்பட இருக்கின்றன. மேல்மட்டக் குழு பிரதிப் பொலிஸ்மா அதிபர் – அமைச்சர்கள் மட்டத்தில் ஆராயும். மத்திய அல்லது நடுத்தரமட்டக் குழு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – நியமிக்கப்பட்ட மாகாணசபை உறுப்பினர் மட்டத்தில் ஆராயும். மக்களிடையே கீழ் மட்டத்தில் செயற்பட இருக்கும் குழுக்களில் சனசமூக நிலைய அலுவலர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
எனவே அன்பார்ந்த பிள்ளைகளே! உங்கள் நண்பர்கள், உறவினர்கள்,தெரிந்தவர்கள் இவ்வாறான போதைப் பழக்கவழக்கங்களுக்கும் களவு, கொள்ளை, சூது போன்றவற்றிற்கும் ஆளாகிறார்கள் எனத் தெரியவந்தால் அவர்களுக்கு அன்பாக எடுத்துச் சொல்லப் பாருங்கள், அவர்களை அவ்வாறான பழக்கங்களிலிருந்து விடுபட்டுச் செல்வதற்கு பாடுபடுங்கள். இல்லை என்றால் எங்கள் குழுக்களிடம் உங்கள் கல்லூரிகள் மூலமாக எடுத்துச் சொல்லுங்கள். முயற்சித்தால் ஆகாதது ஒன்றுமில்லை – என்றார்.