எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் : சுகாஸ்

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (26.01.2018) கரவெட்டியில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய அவர்,

“எங்கள் தலைவன் பிறந்த வரலாற்றுப் பெருமைவாய்ந்த இந்த வடமராட்சி மண்ணிலே, எங்கள் அண்ணன் கஜேந்திரகுமார் பிறந்த இந்த மண்ணிலே எவ்வாறு சுமந்திரன் என்கின்ற ஒரு துரோகி உலாவிக்கொண்டிருக்கிறார்? இவரை எப்பொழுது நாங்கள் இந்த மண்ணிலிருந்து அகற்றப்போகின்றோம். இதுதான் என் முன்னே எழுகின்ற கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை இந்த மண்ணும் மக்களும் விரைவிலே அளிக்கவேண்டும். ஏனென்றால் இன்று இவர்கள் தமிழனத்தை விலைபேசி விட்டார்கள் ஒட்டுமொத்த தமிழினத்தையும் முப்பது கோடிக்கு ஆசைப்பட்டு இவர்கள் விலைபேசிவிட்டார்கள்.

உங்கள் எல்லொருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன். கடந்த வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது ஆரம்பத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்த வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதாக இருந்தார்கள். வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் முதல்நாள் இரவு வரை அதனை எதிர்த்து வாக்களிப்பதாகவே திட்டம் இருந்தது. ஆனால் வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பிற்கு முன்பாக காலை 10 மணியளவில் ரணில் விக்கிரமசிங்கவோடு ஒரு மந்திராலோசனை நடந்தது. அதில் ஒவ்வொரு உறுப்பினரக்கும் இரண்டு கோடி பரிமாறப்பட்டது.

வரவுசெலவுத் திட்டத்தை எதிர்க்க இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றுமே இல்லாத வரவுசெலவுத் திட்டத்தை வெறும் இரண்டு கோடிக்கு ஆசைப்பட்டு அதனை ஆதரித்து வாக்களித்தனர்.

நான் உங்களிடம் கேட்கின்ற கேள்வி இரண்டு கோடிக்கு ஆசைப்பட்டு வரவுசெலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்த இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூத்தாடிகள் இன்னும் ஒரு 10 கோடிக்கு ஆசைப்பட்டு எமது இனத்தை காட்டிக்கொடுத்து விற்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

வர இருக்கின்ற தீர்வுத்திட்டத்தில் ஆளுக்கு 10 கோடியை வாங்கிகொண்டு தமிழினத்தை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

இதற்காகவா எங்கள் தலைவன் போராடினார். இதற்காகவா 20 ஆயிரம் மாவீரர்கள் தங்கள் உயிர்களை விட்டார்கள். கண்களை இழந்து, கால்களை இழந்து தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேளைகளுக்கு துரோகம் இளைத்துக்கொண்டிருக்கின்றது இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

காதட்டல்களுக்காகவோ போலி வாக்குறுதிகளுக்காகவோ இதனை நான் கூறவில்லை. இனியும் அவர்களை விட்டுவைத்தால் போலி வாக்குறுதிகளுக்காக அவர்கள் எங்கள் இனத்தை விற்று அமைச்சுப் பதவிகளை எழுத்து சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இது நிச்சயம் நடக்கும். இவ்வாறான வரலாற்றுத் துரோகிகளை நாம் ஆதரித்து வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கப்போகின்றோமா? அல்லது கொள்கைக்காக பதவியையே தூக்கி எறிந்துவிட்டு வந்த அண்ணன் கஜேந்திரகுமார் தலைமையை ஆதரித்து சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்து எமது கொள்கை வழியான அரசியலை பலப்படுத்தப்போகின்றோமா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும்” – என்றார்.

Related Posts