Ad Widget

எங்களை நிம்மதியாக வாழவிடு

இராணுவத் தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் ஆரம்பித்த இப்போராட்டம் பிரதேச சபையில் முடிவடைந்தது.

இராணுவமே வெளியேறு, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும், எங்கள் வீடு எங்களுக்கு வேண்டும், அபிவிருத்திகள், இழப்பீடுகள் வேண்டாம் காணமல் போன உறவுகளுக்கு முதலில் பதில் சொல் ஐக்கிய நாடுகள் சபையே எங்களை நிம்மதியாக வாழ வழி செய் போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.போராட்டத்தின் இறுதியில் பிரதேசபையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வரமாறு:-

1. யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு உட்பட ஏனைய பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள எமது மக்களுக்குரித்தான குடியிருப்பு காணிகள், வயல் காணிகள், பிரதேசசபை பொது அமைப்புகளுக்குரிய காணிகள், (குறிப்பாக புதுப்பிலவு புதுக்குடியிருப்பு சங்கத்துக்குரிய பத்து ஏக்கர் காணி), எமது மயான பூமிகள் (ஒட்டுசுட்டான் மயானம்) ஆகியவற்றில் அத்துமீறி குடியேறியுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி எம்மை மீள்குடியேற அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

2. யுத்தம் முடிவடைந்துள்ள சூழலில் இன்னமும் சந்தேகத்தின் பேரிலும் ஏனைய குற்றச்சாட்டுகளின் பேரிலும் சிறைவாசம் அனுபவிக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி அவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்து தமது நாளாந்த குடும்பப் பொறுப்பை ஏற்பதற்கு வழிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

3. யுத்தகாலத்தில் தங்களது அரசாங்கத்தின் அறிவிப்பை ஏற்று சரணடைந்தன் பின்னர் காணாமல் போயுள்ளவர்களை மீளவும் அவர்களது குடும்பத்தில் இணைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

4. எம்மைத் தொடர்ந்தும் அச்சுறுத்தி வைத்திருக்கும் பாதுகாப்புப் படையினதும் அவர்களது புலனாய்வுப் பிரிவினரதும் செயற்பாடுகளை நிறுத்தி எமது சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்துவதுடன், எமது அன்றாட குடும்பப் பணிகளையும் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

5.மேற்படி செயல்களில் ஈடுபடுகின்ற பாதுகாப்புப் பிரிவினர் எம்மை அந்நியர்களாகவே பார்க்கின்றார்கள். எனவே அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

6. பலவருடங்களுக்குப் பின்னர் கொக்கிளாய், நாயாறு மற்றும் கொக்குத்தொடுவாய் கடற்பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள எம்மை மீன்பிடியில் ஈடுபட முடியாமல் தடுக்கும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களைத் தடுத்து நிறுத்தி, எமது வலைப்பாடுகளிலிருந்தும் அவர்களை வெளியேற்றி எமது வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்துமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

7. புதுக்குடியிருப்பு சந்தைக்காணியிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றி எமது உள்ளூர் உற்பத்திப் பொருள்களை தங்குதடையின்றி சந்தைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தங்களை அன்புடன் வேண்டுகின்றோம். – என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் மக்களுடைய காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக காணி உரிமையாளர்கள் நீதிமன்றத்தினை நாடுமாறு வடமாகாண முதலமைச்சர் இன்றைய தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

image_handle.php

Protest-mullaiththevu

Protest-mullaiththevu3

Protest-mullaiththevu4

Protest-mullaiththevu5

Related Posts