எங்களின் பிள்ளைகளுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். விடிவு கிடைக்காவிடின் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும் என்று இன்று யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயார் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் செறிந்து வாழும் பகுதி எங்கும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.இவ்வாறான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில் இடம்பெற்றது.அரசியல் கைதிகளது பெற்றோர்களுடன் இணைந்து மன்னார் பிரசைகள் குழு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த மேற்படி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாய் ஒருவரே மேற்படி கருத்தை தெரிவித்திருந்தார்.
இன்றய போராட்டத்திற்கு மன்னார் பிரசைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை மற்றும் அவ்வமைப்பின் இணைப்பாளர் சகாயம் ஆகியோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ.எ.ஆனந்தராஜா உட்பட கட்சியின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், அவரது சகோதரரும் மாகாண சபை உறுப்பினருமான சர்வவேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான சித்தார்த்தன், அனந்தி சசிதரன், கஜதீபன், அமைச்சர் ஐங்கரநேசன் தமிழர் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி உட்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சின்மய மிஸன் ஆதீனத்தின் யாழ் மாவட்ட முதல்வர் சுவாமி யாக்கிரதசைத்தன்ய அவர்களும் சைவத்தமிழ் சபையின் தலைவர் சிவத்திருசோதிமூர்த்தி ஐயா அவர்களும் மதகுருக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.