எங்கட நிலத்தில் சிங்கள மக்கள் உல்லாசம், நாங்கள் அகதி முகாம்களில், கண்ணீருடன் ஊறணி மக்கள்!

வலி வடக்கு மக்கள் தமது சொந்த வீடுகளில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் உல்லாசம் அனுபவிப்பது கண்டு ஊறணி மக்கள் தமது ஆதங்கத்தினைக் கொட்டித் தீர்த்தவாறு கண்ணீர் மல்க வெளியேறினர்.

நேற்று முன்தினம் முதல் ஊறணிப் பகுதியில் ஓர் இறங்குதுறையின் ஊடாக மீனவர்கள் கடலுக்குச் சென்றுவரும் வாய்பு வழங்கப்பட்டது. இதற்காக 2 ஏக்கர் நிலப்பரப்பும் படையினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பங்கு கொண்ட அப்பகுதியை சேர்ந்த மக்களே நிகழ்வு நிறைவுற்று வெளியேறும்போது கருத்துரைத்தனர்.

இவ்வாறு வெளியேறிய மக்கள் தமது நிலமை தொடர்பில் தெரிவிக்கையில் ,

வலி வடக்கின் ஊறணி மற்றும் மயிலிட்டிப் பகுதியிலிருந்து 90ம் ஆண்டு தொடக்கம் 27 வருடங்களாக சொந்த நிலத்தில் வாழ முடியாமல் நலன்புரி நிலையங்களிலும் உறவுகளின் வீடுகளிலும் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அங்கு குந்தியிருக்கும் இராணுவம் எங்களுடைய நிலத்தில், எங்களுடைய வீட்டில் சிங்கள மக்களை மட்டும் அனுமதிக்க அவர்கள் அங்கே தங்கியிருக்கின்றார்கள் இவ்வாறான நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் உருவாகும்.

நல்லிணக்கத்திற்கு ஒருபோதும் தமிழ் மக்கள் தடையாக இருக்கவில்லை மாறாக தமிழ்மக்களின் இடத்தில் படையினரும் சிங்கள மக்களும் இருப்பதே தடையாகவுள்ளது என்பதற்கு இந்த ஓர் விடயமே சான்று பகிர்கின்றது. எனவே எங்களுடைய நிலத்தில் எங்களை மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என்றனர்.

Related Posts