ஊழியர் சேம இலாப நிதிக்கான கைவிரல் அடையாளம் பெறும் பணி இனி யாழ்ப்பாணத்தில்

ஊழியர் சேம இலாப நிதிக்கு விண்ணப்பிப்பவர்களின் கைவிரல் அடையாளம் பெறும் பணிகளை இனிமேல் நிரந்தரமாக யாழ்.மாவட்ட தொழில் திணைக்களத்தில் ஆரம்பிப்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் கே.கனகேஸ்வரன் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்.பண்ணைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வடமாகாணப் பிரதித் தொழில் ஆணையாளர் அலுவலகத்துக்கான கட்டடப் பணிகளில் ஒரு சில பகுதி நிறைவடைந்துள்ளது. இந்தக் கட்டடம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இது திறக்கப்பட்டதும் ஊழியர் சேம இலாப நிதிக்கு விண்ணப்பிப்பவர்களின் கைவிரல் அடையாளம் பெறும் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. இதற்கெனப் பல இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களும் எடுத்து வரப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் ஊழியர் சேம இலாப நிதிக்கு விண்ணப்பிப்போர் கைவிரல் அடையாளம் வழங்கக் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்துக்கே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்த வசதி இங்கு ஏற்படுத்தப்பட்டால் மக்கள் கொழும்பு சென்று அலையும் நிலை தவிர்க்கப்படும். என்றார்.

Related Posts