தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவின்போது மோசடிகாரர்களுக்கு இடமளிக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது.
நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள், தேர்தல் சட்டத்தை மீறியோர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளோர், சுற்றாடல் அழிவு ஏற்படுத்தியோர், அநாவசிய நிதி சேகரிப்பாளர்கள் போன்ற தரப்பினருக்கு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டாம் என கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேர்த்தியானவர்களுக்கு வேட்பு மனு அளிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளதால் அவ்வாறான நபர்களை தெரிவு செய்வதா இல்லையா என மக்கள் தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் தொடர்பில் இதுவரை 1532 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 121 வன்முறைகள் என்றும் 1411 தேர்தல் சட்டங்களை மீறிய செயல் என்றும் கபே இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.