ஊறணி மக்களை ஏமாற்றிய இராணுவம்!

அண்மையில் யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஊறணி பிரதேசத்தின் இறங்குதுறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 500 மீற்றர் நிலப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்த போதிலும் குறித்த நிலப்பகுதியை மக்களிடம் ஒப்படைக்காது 500 மீற்றர் கடற்பகுதியை மாத்திரமே இராணுவம் மக்களிடம் ஒப்படைத்துள்ளதாக வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, ஊறணி கரையோர பிரதேசம் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து, விடுவிக்கப்பட்ட பகுதியை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மக்களுடன் அங்கு சென்று பார்வையிட்டபோதே தமக்கு உண்மை தெரியவந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

500 மீற்றர் கடற்பகுதியை மாத்திரம் விடுவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், படகுகளை நிறுத்துவதற்கோ, வாடிகளை அமைப்பதற்கோ, மீனவர்கள் தங்குவதற்கோ ஏதுவான வகையில் நிலப்பிரதேசம் எதுவும் விடுவிக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

உண்மையில் மக்களின் நன்மை கருதி இப்பிரதேசத்தை விடுவிக்கவேண்டுமாயின் காங்கேசன்துறை பருத்தித்துறை வீதியின் வடக்குப் பகுதியை முழுமையாக விடுவிக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு விடுவித்தால் மாத்திரமே மக்கள் தமது சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியேறி தமது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts