ஊறணி மக்களுக்கு 400 மீற்றர் பிரதேசத்திலேயே மீன்பிடிக்க அனுமதி!

வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறீலங்காப் படையினர் அனுமதியளித்துள்ளனர்.

இடம்பெயர்ந்து மாவிட்டபுரம் – நல்லிணக்கபுரம் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள 130 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு, ஊறணிப் பகுதியில் இருந்து அத்தொழிலை மேற்கொள்ள வசதியாக 400 மீற்றர் கடற்கரைப் பகுதியை சிறீலங்கா கடற்படையினர் விடுவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட ஊறணி கடற்கரைப் பகுதியைச் சுற்றிய பகுதிகள் முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. அங்கு 400 மீற்றர் கடற்கரைப் பகுதி மாத்திரம், முள்வேலிகள் அகற்றப்பட்டு, மீனவர்கள் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியை மீன்பிடி நடவடிக்கைகள் தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது. அத்துடன், இதற்கு அண்டிய பகுதியில் தங்கியிருக்கவும் முடியாது.

திறந்துவிடப்பட்ட பிரதேசத்தில் எந்தவொரு மீன்பிடித் துறையோ அல்லது படகுகளை நிறுத்துவதற்குரிய இடமோ இல்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

மயிலிட்டிப் பிரதேசத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகம் மற்றும் படகுத் துறைகள் இன்னமும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

oorani-boats-1

Related Posts